பாராளுமன்ற அமர்வை ஒத்தி வைப்பது தொடர்பில் அறிவித்தல் வழங்கவில்லை - சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

பாராளுமன்ற அமர்வை ஒத்தி வைப்பது தொடர்பில் அறிவித்தல் வழங்கவில்லை - சபாநாயகர்

நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்ற அமர்வை ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவிதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தின் அமர்வுகளை ஒத்தி வைக்குமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென சபாநாயகர் அலுவலகம் மறுத்துள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்குமாறு ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த தரப்பிடமிருந்தோ தனக்கு பணிப்புரை வழங்கப்படவில்லையென்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திலோ அல்லது வேறெந்த இடத்திலோ அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தனக்கு அறிவிக்கப்படவில்லை. அப்படியான தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவிக்கவில்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தினங்களிலும் பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதற்கான தேவைகள் எதுவும் எழவில்லையென்றும் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாக பாராளுமன்றம் முடக்கப்படும் என்றும் மஹிந்த ஆதரவு எம்பிக்கள் சிலர் கூறியுள்ளனர். 

இதனைத் தவிர்க்கும் நோக்கிலேயே அரசாங்கம் பாராளுமன்ற அமர்வுகளை நாளையும், நாளை மறுதினமும் ஒத்தி வைக்கத் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தினகரன்

No comments:

Post a Comment