பழைய முறைமையின்கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் - பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கைவிடுத்தார் பிரதி அமைச்சர் பைசல் காசீம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 2, 2018

பழைய முறைமையின்கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் - பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கைவிடுத்தார் பிரதி அமைச்சர் பைசல் காசீம்

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையின்கீழே நடத்தப்பட வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் நேற்று  (01) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து கோரிக்கைவிடுத்தார். புதிய முறைமையால் சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து பற்றியும் அவர் பிரதமருக்கு விளக்கிக் கூறினார்.

இந்தச் சந்திப்பு நேற்று இரவு பாசிக்குடாவில் இடம்பெற்றது. மாகாண சபைத் தேர்தல், கம்பெரேலிய மற்றும் எண்டர்பிரைசஸ் வேலைத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு உச்ச பயனைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல விடயங்கள் பற்றி பிரதி அமைச்சர் பிரதமருடன் கலந்துரையாடினார்.

அவற்றுள் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விரிவாகப் பேசப்பட்டது. இது தொடர்பில் பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று அனைவராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இப்போதுள்ள முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் புதிய முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர்.

புதிய முறைமை சிறுபான்மை இன மக்களுக்கு பேராபத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆபத்தான புதிய முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.

புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை எப்படி வென்ற கட்சியை தோல்வியடைந்த கட்சியாக மாற்றி தோல்வியடைந்த கட்சியை வெற்றிபெறச் செய்ததோ அதேபோன்றதொரு ஆபத்தான நிலைமையையே புதிய மாகாண சபை முறைமையும் செய்யும். சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதித்துவம் குறையும். இது உண்மையில் பெரும் அநீதியாகும்.

எமது மக்கள் இந்த அரசின்மீது நம்பிக்கை வைத்தே இந்த அரசை ஆட்சிபீடமேற்றி இருக்கின்றனர். அந்த மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில் அரசால் செயற்பட முடியாது. ஆகவே பழைய முறைமையின் கீழ்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றை நான் பிரதமரைச் சந்தித்து விரிவாக எடுத்துக் கூறினேன். என்றார்.

பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment