தாய்நாட்டை நேசிக்கும் தலைவர் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிரூபித்திருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது ஆழமானது என்பதுடன், நாட்டை எந்தளவுக்கு அவர் நேசிக்கிறார் என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அவருடைய இந்த உரை தொடர்பில் இலங்கையர்கள் அனைவரும் பெருமைகொள்ள முடியுமென்றும் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார். இலங்கை சுயாதீனமான நாடு. யுத்தம் முடிந்து 10 வருடங்கள் ஆகும் நிலையில் நல்லிணக்கம் நோக்கிய எமது பயணத்தை இலங்கையர் என்ற ரீதியில் தொடர்வதற்கு அனுமதிக்குமாறு சர்வதேசத்திடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவையற்ற அழுத்தங்களை எம்மீது திணிக்க வேண்டாம் என்பதையும் ஜனாதிபதி சர்வதேசத்திடம் சுட்டிக்காட்டியிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
கடந்த மூன்றரை வருடங்களாக இலங்கையை ஜனாதிபதி காட்டிக் கொடுத்து வருவதாகவும், ஜெனீவாவில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதன் ஊடாக இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடுகளுக்கு இடமளித்திருப்பதாகவும், அரச தலைவர் என்ற ரீதியில் இதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்களும் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டன.
எனினும், தாய்நாட்டை நேசிக்கும் தலைவர் என்பதை ஜனாதிபதி தனது உரையின் மூலம் நிரூபித்துள்ளார். இதற்கு அப்பால் எவரும் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தனிப்பட்ட ரீதியில் முயற்சிகளை ஜனாதிபதி எடுத்திருந்தார். அது மாத்திரமன்றி ஊடகங்கள் தற்பொழுது எவரையும் விமர்சிக்கக் கூடிய ஊடக சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றன. இதனை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நல்லிணக்கம் என்பது வடக்கிற்கு மாத்திரமல்ல தெற்கிலும் அதற்கான தேவை உள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்பதையும் ஜனாதிபதி ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் எடுத்துக் கூறியிருந்தார்.
இலங்கை விவகாரம் மாத்திரமன்றி பலஸ்தீன உரிமைகள் பற்றியும் பேசியிருந்தார். அது அவருடைய நீண்டகால நிலைப்பாடாகும்.
ஜனாதிபதியின் இந்த உரையானது மிகவும் ஆழமான பார்வையைக் கொண்டிருப்பதுடன், வரலாற்று ரீதியில் முக்கியம் பெறும் உரையாக அமைந்தது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment