அரசியல் தீர்வை தாமதப்படுத்தவே வடக்கு, கிழக்கு ஜனாதிபதி செயலணி - முதலமைச்சர் விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Monday, September 3, 2018

அரசியல் தீர்வை தாமதப்படுத்தவே வடக்கு, கிழக்கு ஜனாதிபதி செயலணி - முதலமைச்சர் விக்னேஸ்வரன்

பொருளாதார நன்மைகளைக் காட்டி தமிழர்களின் அரசியல் தீர்வைத் தாமதப்படுத்தும் நோக்கிலேயே வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக வடக்கு, கிழக்கை பொருளாதார ரீதியில் கவனிக்கிறோம் என்பதை அரசாங்கம் ஜெனீவாவுக்குக் காண்பிப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார்.

அரசின் இந்த செயற்பாட்டின் மூலம் அரசியல் தீர்வு கிடைக்கப்போவதுமில்லை, பொருளாதார விருத்தி எம்மவர் கைவசம் இருக்கப்போவதும் இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாரத்துக்கொரு கேள்வி பதிலிலேயே வடமாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எனக்கு மட்டுந்தரப்பட்ட ஒரு அரசியல் மற்றும் பொருளாதார விருத்தி சம்பந்தமான சலுகையை நான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். இதனால் எமக்கிடையிலான அரசியல் வேறுபாடுகள் அம்பலமாகியுள்ளன.

முன்னர் அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று சில தமிழ்க் கட்சித் தலைவர்கள் கூறிய போது, அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தவர்கள் எமது கட்சியினர். எனினும், அந்தத் “துரோகி”களுடன்தான் இப்போது எமது கட்சியினர் உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் கூட்டு வைத்துள்ளனர்.

பொருளாதார விருத்தியே எமக்குத் தற்போது வேண்டும் என்ற கருத்திருந்திருந்தால் நாங்கள் மற்றவர்கள் அரசாங்கத்தின் ஊடாகப் பொருளாதார விருத்தியைப் பெறுவதை தடை செய்திருக்கவும் அவர்களை துரோகிகளாக அடையாளப்படுத்தியோ இருக்கக் கூடாது.

மாகாணசபை கலைய இரண்டு மாதங்கள் உண்டு. பாராளுமன்றம் கலைய 2 வருடங்கள் உண்டு. இந்நிலையில் செயலணியை நியமித்து செயலாற்ற முன்வந்திருப்பது அரசியல் காரணங்களுக்காக என்று தெரிகிறது. அதேபோல் அதில் சேர்ந்து செயலாற்ற எம்மவர்கள் முன்வந்திருப்பதும் அரசியல் காரணங்களுக்காகத்தான் என்று தெரிகிறது. கட்சி அரசியல் ஒரு பொருட்டல்ல.

எவ்வளவு வேகமாக ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுத் தரமுடியும் என்பதே எனது கரிசனை. நாங்கள் யாவரும் ஒன்றிணைந்து இராணுவத்தினருடன் சேர்ந்த தெற்கத்தைய பெரும்பான்மையினரின் செயலணி ஒரு அரசியல் செயல்பாடே என்று கூறி எமக்கு அரசியல் தீர்வே தற்போது முக்கியமென்ற கருத்தை முன்வைத்திருந்தால் தமிழ் மக்களின் அரசியல் பலமற்ற நிலையும் தமிழ் மக்களின் உரித்துக்களை வழங்க அரசாங்கம் பின்னிற்கும் பாங்கும் வெளியாகியிருக்கும். இதனை உலக நாடுகளுக்கும் எடுத்துக்காட்டியிருக்கலாம். ஆனால் தற்பொழுது தம்மை தாழ்த்தி என்னை ஏற்றிவிட்டுள்ளனர்.

எமக்கிடையிலான கொள்கை ரீதியான வேறுபாடுகள் பகிரங்கப்பட்டுள்ளன. உடனே அரசியல் தீர்வு அவசியம் என்று கூறிய எனது வாசகம் சம்பந்தன் இந்த வருட முடிவுக்கு முன்னர் அரசியல் தீர்வு என்று கூறியதன் பிரதிபலிப்பேயாகும். இப்போது அரசியல் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. பொருளாதார விருத்தியும் எம்மவர் கைவசம் இருக்கப் போவதுமில்லை. செயலணியின் 46 பேரே காய்களை நகர்த்துவார்கள்.

ஆனால் ஜனாதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தில் நீங்கள் உங்கள் ஒரு தலைப்பட்சமான பொருளாதார விருத்திகளை உங்களுக்கு வேண்டுமென்றால் செய்து கொண்டு போங்கள். ஆனால் என்னை அதற்குள் உள்நுழைக்காதீர்கள் என்றே கூறியிருந்தேன்.

பொருளாதாரப் பயன்களைக் காட்டி எமது அரசியல் தீர்வைத் தாமதப்படுத்துவதே அரசின் எண்ணம். அத்துடன் பொருளாதார ரீதியாக நாங்கள் வடக்குக் கிழக்கைக் கவனித்து வருகின்றோம் என்று ஜெனிவாவில் அரசாங்கம் கூற இந்த செயலணியைப் பாவித்து வருகின்றது என்பதை எமது பாராளுமன்ற அங்கத்தவர்கள் உணராதிருப்பது விந்தையாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினகரன்

No comments:

Post a Comment