ஞானசார தேரரின் தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனு பிற்போடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, September 28, 2018

ஞானசார தேரரின் தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை எதிர்வரும் மாதம் 05ம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இன்று (28) இந்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த மனு மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இன்றைய தினம் நீதியரசர்கள் குழாம் சரியாக ஒழுங்கமைக்கப்படாமையால் மனுவை ஒக்டோபர் 05ம் திகதி வரை பிற்போடுவதாக உத்தரவிடப்பட்டது. 

நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றது. 

இந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஞானசார தேரரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஞானசார தேரரால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment