திருக்கோவில் பிரதேச மண்ணரிப்பு தொடர்பில் பல தடவைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் பாராளுமன்றத்திலும் உயர் அதிகாரிகளிடமும் கூறிய போதும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்டவில்லை. இச்செயற்பாடு நல்லாட்சிக்கு பங்கம் விளைவிக்கக்கூடியதொன்றாகும் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்பாக கடல் நீர் உட்புகுந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) மாலை சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நிலமையினை ஆராய்ந்ததுடன் எடுக்கப்பட வேண்டிய தற்காப்பு நிலைகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், செகுடன் காதில் ஊதிய சங்குபோலவே எமது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஜனாதிபதி இவ்விடயத்தில் மௌனம் காப்பது கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு நகரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள போட் சிற்றி துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் தாக்கமும் இதற்கு ஒரு காரணம் எனவும் கூறினார். கொழும்பில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் அரசாங்கம் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொணடார்.
குறித்த பிரதேசத்தில்கடந்த ஞாயிற்றுக்கிழமை(02) கடல் நீர் திடீரென உட்புகுந்து மண்ணரிப்பை ஏற்படுத்தியதுடன் ஆலயம் முன்பாகவுள்ள கொங்கிறீட் வீதியின் கீழ்ப்புறமாக பாரிய குழியையும் ஏற்படுத்தியது. இதனால் குறித்த வீதி சேதத்துக்குள்ளாகியதுடன் உடைந்து விழும் நிலைக்கும் தள்ளப்பட்டது.
மேலும் அருகில் இருந்த தென்னை மரங்களும் பாதிப்புக்குள்ளானதுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவ படகுகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில் விடுமுறை தினமாக இருந்தபோதிலும் அவசரமாக ஒன்றிணைந்த திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனர்த்த மத்திய முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்போடு 500 மண் நிரப்பப்பட்ட மூடைகளை குறித்த பகுதியில் அடுக்கி பாதுகாப்பதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர்.
இதேவேளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பாரிய கற்களை மண் வெளியேற்றப்பட்ட இடைவெளிக்குள் இட்டு வீதியை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆனாலும் கடலரிப்பு தொடருமானால் திருப்படை ஆலயமான பழம்பெரும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள மதில் உடைந்து வீழ்வதுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் வாழ்வதாரங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என அங்கு மக்களால் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.


No comments:
Post a Comment