2009 ஆம் ஆண்டில் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் 3 வருட காலத்தில் லங்கன் விமான சேவை 46.4 பில்லியன் திறைசேரி முறிகளை விநியோகித்துள்ளது. இது தொடர்பில் யார் ஆலோசனை வழங்கினார்கள் என ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை என சிறிலங்கன் விமான சேவை நிறுவன செயலாளர் டெல்ரீன் திருகுமார் தெரிவித்தார்.
லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா சேவையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றுமுன்தினம் (06) சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீல் உனம்பு சாட்சி விசாரணையை முன்னெடுத்தார்.
இது தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு, சாட்சியாளருக்கு பணித்ததோடு அதற்கு தேவையான கால அவகாசம் வழங்குவதாகவும் அறிவித்தது. இது தொடர்பான விசாரணை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன தலைமையிலான குழு முன்னிலையில் இடம்பெறுகிறது.
ஆணைக்குழு மீண்டும் அழைக்கும் தினத்தில் குறித்த ஆவணங்களுடன் ஆஜராகுமாறு ஆணைக்குழு தலைவர் அவருக்கு அறிவித்தது.
ஆவணங்களை சமர்ப்பித்து சாட்சியமளித்த சிறிலங்கன் விமான சேவை நிறுவன செயலாளர் டெல்ரீன் திருகுமார், 2011 இல் 14.2 பில்லியனும் 2012 இல் 12.6 பில்லியனும் 2013 இல் 19.5 பில்லியனும் திறைசேரி முறிகள் ,இலங்கை விமானச் சேவையினால் விநியோகிக்கப்பட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டு கம்பனி சட்டத்தின் கீழ் பதிவின் போது வெளியிடப்பட்ட மூலதனம் குறைந்துள்ளது. இதனால் பாரிய முதலீட்டு தேவை குறித்து பணிப்பாளர் சபை முடிவு எடுத்திருந்தது. அது தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன எனவும் அவர் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment