நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு சமாந்தரமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாட்டின் நிறைவேற்று பகுதியுடன் இணைந்ததான சட்டத்துறை அதிகாரிகளை தனியான பிரிவாக அடையாளம் காணும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்றையதினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன தனித்துவமான திணைக்கள அமைப்புக்களாக மீள ஒழுங்குபடுத்தப்பட்டதுடன், அந்தத் திணைக்களங்களில் உள்ள அதிகாரிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
"நீதித்துறையுடன் தொடர்புபட்ட நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் ஆகிய தனித்துவமான சேவைகளாகக் கருதி அவர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டன.
இந்தத் திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள் தனியார் துறையில் பணியாற்றினால் போதுமான வருமானத்தை ஈட்டுபவர்களாக இருப்பர். எனவே அவர்களை இந்த சேவையில் தொடரச் செய்வதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் துறைகளை தனிப்பட்ட சேவைகளாகக் கருதி சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி ஏனைய அரச துறை அதிகாரிகள் சம்பள அதிகரிப்பைக் கோர முடியாது என நிதி அமைச்சு வட்டாரம் விளக்கமளித்தது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளங்கள் நீதிச்சேவை அதிகாரிகளுக்கு சமாந்தரமாக அதிகரிக்கப்பட வேண்டும்.
2006ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை சுட்டிக்காட்டி சம்பள உயர்வுகோரி வருகின்றனர். எனினும், ஜனவரி 9ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய பாராளுமன்றத்தின் இந்தப் பிரேரணை செல்லுபடியாகாது.
இதனாலேயே நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பை நிராகரித்திருப்பதாக அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி தற்பொழுது உள்ள நிலையில் எந்தவொரு தரப்பினரதும் சம்பளம் அதிகரிக்கப்படக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என அமைச்சர் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அறிவித்திருந்தார். அப்படி சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதாயின் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறான யோசனைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது இவ்விதமிருக்க, மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை அதிகரிக்கவிருப்பதாக எதிர்க்கட்சியினர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment