பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி தலைவர் கொலை - 2 பேருக்கு மரண தண்டனை - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி தலைவர் கொலை - 2 பேருக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை விதித்து கராச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலின்போது, கராச்சி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த நேரத்தில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் ஜாஹ்ரா ஷகீத், அவருடைய வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு எம்.கியூ.எம்.எல். என்ற அமைப்புத்தான் காரணம் என இம்ரான்கான் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து ஜாஹ்ரா ஷகீத் கொலையில், அந்த அமைப்பை சேர்ந்த முகமது ரஷீத் என்ற மாஸ்டர், ஜாகித் அப்பாஸ் ஜைதி, இர்பான், கலீம் ஆகிய 4 பேர் சிக்கினர்.

இது தொடர்பான வழக்கை கராச்சி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணையின்போது முகமது ரஷீத் என்ற மாஸ்டர், ஜாகித் அப்பாஸ் ஜைதி ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளும் அவர்களை சரியாக அடையாளம் காட்டினர்.

இந்த நிலையில் விசாரணை முடிந்து, கராச்சி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று (31) தனது தீர்ப்பை வழங்கியது. ஜாஹ்ரா ஷகீத் கொலையில், முகமது ரஷீத் என்ற மாஸ்டர், ஜாகித் அப்பாஸ் ஜைதி ஆகிய 2 பேருக்கும் உள்ள தொடர்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என நீதிபதி கூறி 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் சிக்கி இருந்த எஞ்சிய இருவரான இர்பான், கலீம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment