ஜனாதிபதியாக இருந்தாலும் சரி பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி அரசியல் கொள்கைகளை வெறுமனே சொல்லாமல் அதை உண்மையிலே அமுல் நடாத்தக் கூடியவர்களாக செயற்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழாவின் இறுதி வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் எல்லோரையும் உள்வாங்கி அபிவிருத்திகள் செய்வதுதான் நிலைபேறான அபிவிருத்தியாகும்.
ஜனாதிபதியவர்கள் 2016ம் ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையிலே ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்தார். நிலைபேறான அபிவிருத்தியை இலங்கையிலும் செய்வோம் என உறுதி பூண்டார்.
அந்த நிலைபேறான அபிவிருத்தியை அனைத்து துறைகளிலும் செய்வோம் கூறினார். அனைவரையும் உள் வாங்கியதாக அந்த நிலைபேறான அபிவிருத்தி இடம் பெறும் என கூறியிருந்தார். இன்று அது இடம் பெற்று வருகின்றது.
நம்பிக்கையை ஊட்டக்கூடிய வகையில் அரசாங்கம் உண்மையிலேயே கடைப்பிடிக்குமானால் வடக்கு கிழக்கிலே உள்ள எல்லா இளைஞர்களும் எதிர் காலத்திலே எல்லா வகையிலும் ஒத்துழைக்க கூடிய வகையிலே வருவார்கள்.
நம்பிக்கையை ஊட்டினால் அந்த இளைஞர்கள் எதிர் மாறான கருத்துக்களை கொண்டுவருபவர்களாக இருக்க மாட்டார்கள்.
ஜனாதிபதியாக இருந்தாலும் சரி பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி அரசியல் கொள்கைகளை வெறுமனே சொல்லாமல் அதை உண்மையிலே அமுல் நடாத்தக் கூடியவர்களாக செயற்பட வேண்டும். அதைப்பயன் படுத்தி எந்தளவு கைகொடுப்போமோ அந்தளவுக்கு எல்லோரும் வெற்றி பெறலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் பச்சைப் பொருளாதாரமும் நீலப் பொருளாதாரமும் இருக்கின்றது. பச்சைப் பொருளாதாரம் என்றால் நல்ல விவசாய வயல் நிலங்கள் இருக்கின்றன. நீலப் பொருளாதாரம் என்றால் நல்ல கடல் வளம் இருக்கின்றன.
இந்தப் பொருளாதார வளங்கள் நிறைந்த இந்த கிழக்கு மாகாணத்தில் எல்லா இன மக்களும் வாழ்கின்றனர். இந்த வளங்களை நாம் பயன் படுத்தினால் நாம் நமது மாகாணத்தையும் மாவட்டத்தையும் கட்டியெழுப்ப முடியும். இன மத மொழி பேதமற்ற சகோதர வாஞ்சை அவசியமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதியவர்கள் பல முறை வருகின்றார்கள், பிரதம மந்திரியவர்களும் வந்துள்ளார்கள். வரவிருக்கின்றார்கள். நாங்கள் எங்களது பிரச்சினைகளை அவர்களுக்கு முன் வைத்து அவர்கள் வெறுமனே வந்து போவது மாத்திரமல்லாமல் அவர்கள் வந்து போகும் நேரத்தில் எங்களது தேவைகளை அவ்வப் போது சுட்டிக்காட்டி அதைப் பெற்று உரிய அபிவிருத்திகளை நாங்கள் மேற் கொண்டு நல்லதொரு எதிர் காலத்தை ஏற்படுத்துவோம் என்பதையும் கூறி வைக்க விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment