தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் இலஞ்சம் கொடுத்தே சித்தியடைகின்றனர் எனும் விஜயதாச ராஜபக்சவின் கூற்றை வண்மையாக கண்டிக்கிறேன். – பிரதி அமைச்சர் ஹரீஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் இலஞ்சம் கொடுத்தே சித்தியடைகின்றனர் எனும் விஜயதாச ராஜபக்சவின் கூற்றை வண்மையாக கண்டிக்கிறேன். – பிரதி அமைச்சர் ஹரீஸ்



விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் சித்தியடைகிறார்கள் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறிய கூற்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் வண்மையாக கண்டிப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (8) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது தெரிவித்த மேற்படி கூற்றுத் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கண்டவாறு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நான் கல்முனையில் இருந்தபடியினால் குறித்த பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள முடியாமல் போனதனால் அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியாமல்போனது. துறைசார்ந்த பொறுப்புவாய்ந்த அமைச்சராக இருந்துகொண்டு இந்நாட்டின் அடையாளச் சின்னமான தேசிய பல்கலைக்கழகத்தின் புகழுக்கு களங்கத்தையும் அப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளின் நற்பெயருக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்தும்வகையில் குறித்த அமைச்சர் உரையாற்றியமை மிகுந்த வேதனையளிக்கின்றது.

துறைசார்ந்த அமைச்சர்கள் தமக்கு கீழுள்ள நிறுவனங்களின் அபிவிருத்தியை உச்ச நிலைக்கு கொண்டு சென்று அதன் புகழை உயர்த்துவதற்கு பாங்காற்றுவதனையே உலகலாவிய ரீதியில் பாத்திருக்கின்றோம் ஆனால் இலங்கையில் அதற்கு மாற்றமாக நடைபெறுகின்றது. 

உண்மை நிலையினை கண்டறிந்து அந்நிறுவனத்தின் புகழை உயர்த்துவதற்கு முயற்சிசெய்யாது ஏளனமாக தன்னுடைய நிறுவனத்தைக் கொச்சைப்படுத்தி அந்நிறுவனத்தின் செயற்பாட்டை நலிவடையச் செய்யும்வகையில் துறைசார்ந்த அமைச்சர் பேசியிருப்பது இனவாத கண்ணோட்டத்துடன் என்பது வெளிப்படையாகின்றது.

மேலும் குறித்த பல்கலைக்கழகத்தின் அமைவிடம் முஸ்லிம் சமூகத்தைப் பெரும்பாண்மையாக கொண்ட பிரதேசமாக காணப்படுவதனால் அமைச்சருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி மற்றும் எரிச்சலின் வெளிப்பாடாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். 

எனவே இந்த அமைச்சரின் கூற்றை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்க்க வேண்டியுள்ளது, அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த விடயத்தைக் கொண்டுவருவதோடு பிரதமரின் கவனத்திற்கும் கொண்டுசெல்ல இருக்கின்றேன்.

படித்த நாகரிகமுள்ள எந்த ஒரு சமூகமும் இவ்வாறான கூற்றுக்களை அங்கிகரிக்க மாட்டாது என்பதை உறுதியாக நம்புகின்றேன். எனவே ஒட்டுமொத்த கல்வியியலாளர்களும் இக்கூற்றைக் கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஊடகப் பிரிவு 

No comments:

Post a Comment