பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெனாசீர் பூட்டோ கொலை, நீதிபதிகளை கைது செய்து சிறையில் அடைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸஷ் முஷரப், கைது நடவடிக்கையை தவிர்க்க வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். கடந்த 2013-ம் ஆண்டு அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அவர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார்.
ஆனால், அவர் மீது உள்ள குற்ற வழக்குகளை காரணம் காட்டி அந்நாட்டு அரசு அவரை வீட்டுக்காவலில் வைத்தது. மேலும், பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாழ்நாள் தடையும் விதித்து பெஷாவர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தடையை எதிர்த்து முஷரப் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2016-ம் ஆண்டு துபாய் சென்ற அவர் அதன் பிறகு நாடு திரும்பவில்லை.
இந்நிலையில், முஷரப்பின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி சகிப் நிசார் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வு, முஷரப் வரும் ஜூலை 25-ம் திகதி நடைபெற உள்ள அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட, அவர் நிபந்தனையின் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர்.
அதன் அடிப்படையில், முஷரப்பின் மேல் முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்பாக வருகிற ஜூன் 13-ம் திகதி முஷரப் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் திரும்பும் அவரை, அந்நாட்டு அரசு பழைய வழக்குகளை காரணம் காட்டி கைது செய்யவும் தடை விதித்துள்ளது.

No comments:
Post a Comment