ஜோர்டான் அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வரிவிதிப்பு சட்டம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடத்திய 4 நாள் போராட்டத்துக்கு அடிபணிந்த பிரதமர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள் கடந்த 4 நாட்களாக வீதிகளில் திரண்டு தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார், தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் சர்வதேச நாடுகளில் உள்ள ஊடகங்கள் இந்த போராட்டம் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தன.
இந்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில். கடந்த இரண்டாண்டுகளாக அரசுக்கு தலைமை ஏற்றுவரும் பிரதமர் ஹனி அல் முல்கியை ராஜினாமா செய்யக்கோரி ஜோர்டன் மன்னர் அப்துல்லா உத்தரவிடவுள்ளதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து, மன்னரை இன்று சந்தித்த ஹனி அல் முல்கி, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுகொண்ட மன்னர் அப்துல்லா, விரைவில் புதிய பிரதமரை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மக்கள் எந்த காரணங்களுக்காக போராட்டத்தில் குதித்தனரோ.., அதற்கான நிவாரணமும் தீர்வும் எட்டப்படுமா? என்பது குறித்த மன்னரின் அறிவுப்புக்காக மக்கள் காத்திருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment