வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெளியிடங்களை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் கடலட்டை பிடிப்பை நிறுத்துமாறு கோரி, இன்று யாழ்ப்பாண நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் முற்றுகையிடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், மாவைசேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தனும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் அலுவலகத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் போராட்டக்காரர் முற்றுகையிட்டனர். அதனால் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அலுவலகத்துக்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டனர்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிலங்கை மீனவர்களின் இந்த செயற்பாட்டை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தென்னிலங்கை மீனவர்களால் முன்னெடுக்கப்படும் கடலட்டை பிடிக்கும் தொழிலை தடுத்து நிறுத்தி, அவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதுடன் வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலை முற்றாக தடைசெய்யுமாறு வலியுறுத்தியும் உள்ளூர் மீனவர்களால் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே இன்றைய முற்றுகைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்கள் சந்திரலிங்கம் சுகிர்தன், ரவிகரன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.




No comments:
Post a Comment