ஏறாவூர் நகர சபையின் செயலாளரை இடமாற்றம் செய்வதற்காக மிகத்திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தின் பின்னனியில் முன்னாள் முதலமைச்சர் இருப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபை செயலாளருக்கு எதிராக கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் (30) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஏறாவூர் நகர சபை, மக்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு சிறந்ததொரு நிருவாக செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், அந்த சபையினுடைய செயலாளருக்கு எதிராக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னனியில் முன்னாள் முதலமைச்சர் இருந்து செயற்படுவதாக தெரியவருகிறது. குறிப்பாக ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுகள் தாமதம் மற்றும் ஊழியர் ஒருவருக்கு தவறாக பேசியமை என்பவற்றுக்காக, ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு செயலாளரை இடமாற்றுமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சபையினுடைய செயலாளருக்கும், ஊழியருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை உண்மையாகும். அதனை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்ப்பதற்கு அரசியல் தலைவர்கள் முயல வேண்டும். அல்லது உயர் மட்டத்தில் பேசி தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இதனைவிடுத்து தொழிலாளர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டங்களை செய்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை விட்டு செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோருவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
முன்னாள் முதலமைச்சர் தனது ஆட்சிக்காலத்தின் போது கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் அளவுக்கதிகமான தொழிலாளர்களை நியமனம் செய்தார். இதனால் மக்களின் வரிப்ப்னத்தில் சம்பளம் வழங்க வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலை உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஏற்பட்டது. மேற்குறித்த நியமனத்தினால் கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகளினுடைய மக்கள் வரிப்பணம் வீன்விரம் செய்யப்பட்டு வருகிறது.
மேற்படி நியமனத்தின் போது சுமார் 71பேர் ஏறாவூர் நகர சபையிலும் தொழிலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் மாதாந்த சம்பளமாக சுமார் 7லட்சம் ரூபாவினை சபையின் நிதியிலிருந்து வழங்க வேண்டியுள்ளது.
ஆனால் தற்போது சுமார் 10லட்சம் ரூபாய் மாத்திரமே சபையினது மாதந்த வருமானமாகவுள்ளது. சிறியதொரு வருமானத்தை வைத்துக்கொண்டு பெருந்தொகையான நிதியினை ஊழியர்களின் சம்பளத்திற்கு செலவு செய்து விட்டு எவ்வாறு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது.
அரசியல் நோக்கத்திற்காக திட்டமிடப்படாத வகையில் வழங்கப்பட்ட நியமனங்களினால் ஏறாவூர் நகர சபையினுடைய நிதி வீன்விரயம் செய்யப்படுகின்றது. அத்துடன் சபையின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு முன்னாள் முதலமைச்சரே பிரதான காரணமாகவுள்ளார்.
அவர் தனது அரசியல் அதிகாரத்தின் ஊடாக உள்ளுராட்சி சபைகளை தன் கைவசம் வைத்துக்கொண்டு தான் நினைத்தவாறு சபைகளை வழிநடாத்திக்கொண்டிருந்தார். அதேபோன்றுதான் இன்று ஏறாவூர் நகர சபையினையும், செயலாளரையும் வழிநடாத்த முனைகின்றார்.
அதற்கு இடம்கொடுக்காததற்காக செயலாளரை எப்படியோ வெளியேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது அத்தனை முயற்சிகளும் தற்போது தோல்வியடைந்துள்ளது. அதனாலேதான் இப்போது ஊழியர்களின் பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்துகின்றனர். இதனை ஏறாவூர் சமூகம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
ஏறாவூர் நகர சபைக்கு சொந்தமான வாகனமொன்று கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை மாயமானதாகவும், அதனை கொழும்பில் சிலர் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியதாகவும் தற்போது செய்திகள் உலாவுகிறது. அத்துடன், ஏறாவூர் நகர சபையினுடைய நிருவாகத்தினை சிலர் கையிலெடுத்து செயற்படுவதற்கும் முயற்சிக்கின்றனர்.
மேலும் அந்த சபையினை தங்களது அரசியல் பணிமனையாக பயன்படுத்தவும் எத்தனிக்கின்றனர். இதற்கு செயலாளர் உடன்படாததனால் இன்று செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுவே உண்மையான சம்பவமாகும்.
ஏறாவூர் நகர சபையினுடைய செயலாளர் ஒரு இளம் நிருவாக சேவை அதிகாரி அவர் தனது பணியினை செவ்வனே செய்துவருகிறார். ஒரு நிறுவனத்திலே நேர்மையாக பணியாற்ற முற்படுகின்ற போது ஊழியர்களுக்கும் நிருவாகிகளுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரன விடயமாகும்.
ஆனால் இன்று செயலாளருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையை பூதாகரமாக்கி பெரிது படுத்தியுள்ளனர். இந்த விடயங்களை ஏறாவூர் மக்கள் அறியாமலுமில்லை. ஒரு இளம் நிருவாக சேவை அதிகாரியை பழிவாங்கி அவர் மீது சேறுபூச விளைவது கவலையான விடயமாகும்.
மேற்படி விடயங்களுக்கும், தாங்கள் சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் செயலாளர் தடையாகவுள்ளார் என்பதற்காக வீதித் தொழிலாளர்களை வீதியில் இறக்கி போராடவது நியாயமற்றதொரு செயற்பாடாகும். எனவே இவ்வாறான சம்பவங்கள் இனி ஒருபோதும் எமது பிரதேசத்தில் இடம்பெறுவதற்கு இடம்கொடுக்க முடியாது.
அரசியல் அதிகாரம் இருந்த போது சர்வதிகாரியாக செயற்பட்ட முன்னாள் முதலமைச்சர் தற்போது அதிகாரம் இல்லாத சூழ்நிலையில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கிறார். அதிகாரம் இருந்த போது சர்வதிகாரியாக செயற்பட்டதனால் இப்போது அவருக்கு அன்பினால் எதனையும் சாதிக்க முடியாமலுள்ளது.
அண்மையில் பிரதமர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது. பிரதமரின் வருகையினையிட்டு உள்ளுராட்சி மன்றங்களின் நிதிகள் வீனாக செலவு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக ஏறாவூர் நகர சபையிலிருந்து சுமார் 8இலட்சத்து 50ஆயிரம் ரூபாவும், காத்தான்குடி நகர சபையிலிருந்து சுமார் 7இலட்சம் ரூபாவும், ஆரயம்பதி பிரதேச சபையிலிருந்து சுமார் 5இலட்சம் ரூபா நிதியும் செலவு செய்யப்பட்டது.
இவைகள் மக்களுடைய வரிப்பணமாகும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தியே அந்தப்பணங்கள் செலவு செய்யப்பட்டது. இதனை யார் செய்தார்கள் என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எம்.ஜே.எம்.சஜீத்
No comments:
Post a Comment