மலையக மக்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்ய தயாராக உள்ளது - இந்திய தூதுவர் எச்.ஈ.அரண்டம் பக்ஷி - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

மலையக மக்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்ய தயாராக உள்ளது - இந்திய தூதுவர் எச்.ஈ.அரண்டம் பக்ஷி

சினிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக பல உறவுகள் பிரியப்பட்டுள்ளது என்ற கடந்த கால நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும் பொழுது வேதனையாக இருக்கின்றது. கடந்த கால நிகழ்வுகளுக்கு அப்பால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை சுபீட்சம் பெற இந்திய அரசாங்கத்தால் தேவையான நேரங்களில் தேவையான உதவிகளை செய்வோம் என இலங்கைக்கான இந்திய கடமை தூதுவர் எச்.ஈ.அரண்டம் பக்ஷி தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் ஊடான 14000 வீட்டு திட்டத்தில் 250 வீடுகளை தலவாக்கலை மடக்கும்புரை மேல் பிரிவு தோட்டத்தில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா வைபவ ரீதியாக 04.06.2018ம் திகதி (இன்று) இடம்பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய அரசாங்கத்தோடு, இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள உறவை விட கூடுதலான உறவு மலையக மக்களுக்கும் இந்தியாவுக்குமே காணப்படுகின்றது. 150 வருடங்களுக்கு மேலாக சொந்த காணிகளில் வீடுகள் இல்லாது வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு சொந்த காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நல்லதோர் செயல் தற்பொழுது நடந்தேறி வருகின்றது.

இந்த காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்கள் பாடுபட்டு இருக்கின்றார்கள். இதன் காரணமாகவே இந்திய அரசு நிதிகளை ஒதுக்கி வீடுகளை அமைக்க முன்வந்துள்ளது.

நிதி மாத்திரமே இந்திய அரசாங்கம் வழங்கும் இந்த நிலையில் அந்நிதியினை கொண்டு பாதுகாப்பான இடங்களில் தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க இலங்கை அரசாங்கத்தின் உங்கள் தலைவர்களுடான அமைச்சு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த காலங்களில் காணிகளை பெற முடியாத நிலையில் இந்திய வீடமைப்பு திட்டத்தை நிறைவேற்ற முடியாத இருந்த காலகட்டத்தில் 7 முதல் 10 பேர்ச் கொண்ட நிலப்பரப்பை இவர்கள் இப்பொழுது பெற்றுக்கொடுப்பதால் இதில் இந்திய வீடமைப்பு திட்டம் துரிதகதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உங்களுக்குரிய சூழலில் தேவையான விதத்தில் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு இந்திய அரசாங்கம் மற்றும் இல்ஙகை அரசாங்கம் தேசிய ரீதியில் வீடுகளை அமைத்து கொடுத்து அதில் சுபீட்சமான வாழ்க்கையை வாழ பெருந்தோட்ட மக்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றது.

எமக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அதன்போது மலையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இவர் இங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்து அவர்களின் நிலையை உணர்ந்துள்ளார்.

இதற்கமைய இந்திய அரசு 10000 வீடுகளை மேலதிகமாக வழங்கியுள்ளது. இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் பொழுது மேலதிகமான வீட்டு உதவிகளையும் இந்திய அரசு இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நாம் நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.

என்னால் உறுதியளிக்க முடியும். இந்திய அரசினால் பெருந்தோட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்ய வேண்டிய நேரத்தில் செய்து முடிப்போம் என்பதாகும்.

லயன் வாழ்க்கையில் வாழ்ந்து வரும் இம்மக்களுடைய வாழ்க்கை சுபீட்சம் பெற வேண்டுமானால் தனி வீடுகளில் கிராம மக்களாக வாழ வைக்க வேண்டும் என உங்கள் தலைவர்கள் எம்மிடம் வழியுறுத்தியமைக்கமைவாக நாம் தனி வீடுகளுக்கான பாரிய உதவிகளை செய்வோம்.

உங்கள் குறைகள் எதுவாக இருப்பினும் உங்களுடைய தலைவர்களுக்கு தெரிவித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். இன்றைய நாள் ஒரு மகிழ்ச்சிகர நாளாக அமைந்தமைக்கு இந்திய அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment