ஹக்கீமை நியமிப்பதற்கு ரிஷாட் கடும் எதிர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

ஹக்கீமை நியமிப்பதற்கு ரிஷாட் கடும் எதிர்ப்பு

நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதனை நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரும் அமைச்சரவையின் இணை ஊடக பேச்சாளருமான ராஜித சேனாரத்னவும் உறுதிப்படுத்தினார்.

வடக்கின் மீள் குடியேற்றம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்ததையடுத்தே அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இக்குழுவில் வடக்கில் சிங்களவர்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றும் வன்னிப்பகுதி மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவில் இணைக்கப்பட்டால் அக் குழுவிலிருந்தும் தான் விலகிக்கொள்வதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்பதால் வடக்கு மீள் குடியேற்றம் தொடர்பான குழுவில் அவரை இணைத்துக்கொள்ளமுடியாது என எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்கவும் பைசர் முஸ்தபாவும் எவ்வாறு நியமனம் பெற்றார்கள் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் வினவியுள்ளார்.

அமைச்சர் துமிந்த திசாநாயக்க வடக்கில் சிங்களவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக செயற்படுவதற்காகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா மாகாண சபை அமைச்சர் என்பதாலும் நியமனம் பெற்றுள்ளார் என பதிலளிக்கப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment