மிஹின் லங்கா தனியார் நிறுவனத்தை அதன் முதலாவது பணிப்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவே ஸ்தாபித்துள்ளமை இன்று தெரியவந்துள்ளது.
ஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா விமான நிறுவனங்கள் மற்றும் ஶ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நடைபெற்ற சாட்சி விசாரணைகளின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கூடியபோது பதிவாளர் திணைக்களத்தின் பிரதிநிதி இந்திக குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி மிஹின் லங்கா தனியார் நிறுவனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதில் குழறுபடிகள் இருப்பதாக அப்போதைய நிறுவனங்கள் பதிவாளர் அடிக்குறிப்பிட்டிருந்ததாக சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தில் நிறுவன செயலாளராக எஸ்.எஸ். கன்சல்டன்ஸ் அன்ட் கோப்ரேட் செக்ரட்ரீஸ் என்ற நிறுவனமே கையொப்பமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
விண்ணப்பிப்பவர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஸ, பணிப்பாளராக கையொப்பமிட்டிருந்ததாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.
மிஹின் லங்கா நிறுவன விண்ணப்பத்தில் தகவல் வழங்குபவராக கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக இந்திக குணவர்தன தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும் நிறுவனப் பதிவுக்கான சான்றிதழ் 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனத்தின் முதல் பணிப்பாளர்களாக கோட்டாபய ராஜபக்ஸ, கலாநிதி பீ.பி.ஜயசுந்தர முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.
நிறுவனமொன்றை ஸ்தாபிக்கும்போது பணிப்பாளர் சபையில் குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டியது அவசியம் என்ற போதிலும் மிஹின் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அந்த சந்தர்ப்பத்தில் நான்கு உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையும் இன்று தெரியவந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு நிறுவனங்கள் பதிவு ஆவணங்களில் மிஹின் லங்கா பணிப்பாளர் சபையில் கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
2006 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு ஜுன் 27 ஆம் திகதி வரை லங்கா புத்திர வங்கி மற்றும் திறைசேரி என்பன மிஹின் லங்கா நிறுவனத்தில் அவ்வப்போது 14 .4 பில்லியன் ரூபாவை முதலீடு செய்ததாகவும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனம் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது 17 பில்லியனுக்கும் மேற்பட்ட நட்டத்தை எதிர்நோக்கியிருந்ததுடன் நிறுவனத்தின் கடன் தொகையும் 10 பில்லியன் ரூபாவுக்கு மேல் காணப்பட்டது.
2016 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் நிறுவனத்தின் நட்டம் 181 மில்லியன் ரூபாவாகும்.

No comments:
Post a Comment