அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று (18) தெரிவித்தது.
நேற்றைய தினம் ஜனாதிபதியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அது ஏமாற்றமாகவே முடிந்தது என மேற்படி கூட்டமைப்பின் உபசெயலாளர் அநுருத்த தசநாயக்க தெரிவித்தார்.
ஒரு மாத காலத்தில் எமது கோரிக்கைக்கு தீர்வு பெற்று தரமுடியும் என தபால் மா அதிபர் தெரிவித்து வருகிறார். எனினும் நாம் போதியளவு கால அவகாசம் வழங்கியிருந்தோம். அப்படியானால் மேலும் ஒரு மாதத்திற்கு நாம் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று கொழும்பு விஜேவர்தன மாவத்தையிலுள்ள பிரதம தபாலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டது. அதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றதுடன் இடையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதேவேளை மேற்படி முன்னணியின் இணைப்புச் செயலாளர் கே. எம். சிந்தக்க பண்டார உள்ளிட்ட ஐவரை ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாக கூறப்பட்டது.
எனினும் அங்கு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஒருவருடனேயே பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பளிக்கப்பட்டது.
அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மாத்திரமே ஏதாவது முடிவொன்றை எட்டமுடியும் என்று நாங்கள் நம்பியிருந்தோம்.
அது ஏமாற்றமாகியது. அதனால் மகஜரை கையளித்துவிட்டு நாம் திரும்பிவிட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி கூட்டமைப்பினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment