மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக்குளத்தின் வான்கதவுகள் கடந்த 25ம் திகதி திடீரென திறந்து விடப்பட்டதன் மூலம் உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள 800 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 6000 ஏக்கர் நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 10 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அன்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையினால் நாட்டின் பல குளங்கள் நிரம்பியதையடுத்து அக்குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு அபாயத்திலிருந்து பாதுகாக்கப்பட்டன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டன.
கடந்த 25ம் திகதி அதிகாலை மட்டக்களப்பு உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு 15தடி நீர் ஒரே தடவையில் வெளியேற்றப்பட்டதால் அப்பகுதி விவசாயிகளுக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போகத்திற்கான நெற் செய்கையின் 30 நாள் பயிர்களாக இருந்த வேளையில் அந்த நெற்பயிர்கள் இதனால் அழிந்து போயுள்ளன.
வயல் கட்டுக்கள் உடைந்து; சேதமடைந்துள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உன்னிச்சை குளத்தின் வான் கதவுகளை திடீரென திறந்து பொறுப்பற்ற விதத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அதிகாரிகள் நடந்துள்ளதாகவும் இதனாலேயே இந்த நஸ்டம் ஏற்பட்டதாகவும் இந்த திட்டத்திலுள்ள விவசாயிகள் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
தேவையான நேரத்தில் தேவையான அளவு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டதாகவும் இதன் மூலம் மக்களையும் விவசாயிகளையும் பாது காத்துள்ளதாகவும் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயி ஒருவர் நீர்ப்பாசனத்திணைக்கத்தின் அதிகரியொருவரை தாக்கியதாகவும் இதனையடுத்து தாக்கிய விவசாயி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்தின் திட்ட முகாமைக்குழு தலைவர் கந்தையா யோகவேல் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மகேஓயா பதுளை போன்ற பகுதிகளில் அதிகளவு நீர் வீழ்ச்சி காணப்படுமாயின் அந்த தண்ணீர் காட்டுப்பகுதியால் எமது பகுதிக்கு இரண்டு நாட்களில் வந்து சேரும். ஆனால் உன்னிச்சையில் பெயும் மழை எங்களை பெரிதாக தாக்காது.
அந்த வiயில் கடந்த 19 மற்றும் 20ம் திகதிகளில் பதுளை பண்டாரவளை போன்ற பிரதேசங்களில் கடும் மழை வீழச்சி காணப்பட்டது.
இந்த நேரம் எமது உன்னிச்சைக்குளத்தில் 31.2 அடி தண்ணீர் காணப்பட்டது. அந்த தண்ணீரை குறையுங்கள் அதனை குறைத்து 28 அடி மட்டுக்கு கொண்டு வாருங்கள் என நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகளிடம் கூறினோம்.
நாங்கள் கடந்த 19, 20, 21ம் திகதிகளில் இந்த விடயத்தை நாங்கள் கூறியும் அவர்கள் கணக்கெடுக்க வில்லை.
23ம் திகதி உன்னிச்சைக்குளத்தில் சற்று தண்ணீர் அதிகரித்து வந்த நிலையில் இது ஒரு ஆபத்தான அறிகுறி என்பதை நான் நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகளுக்கு விளக்கினேன். அவர்களும் அதனை புரிந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் 24ம் திகதி ஆறங்குலம் தண்ணீரை திறந்து விடப் போகின்றோம் என நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அதிகாரிகள் கூறினார்கள்.
இதனை அந்த பகுதி விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கூறினேன் இதையடுத்து 24ம் திகதி மாலை திறந்து விடப்பட்டு ஆறங்குலம் தண்ணீர் போவதாக அதிகாரிகள் கூறினார்கள்.
ஆனால் அவர்கள் திறந்து விட்டது அரையடியல்ல 15 அடி தண்ணீர் என்பதை நான் பின்னர் அறிந்து கொண்டேன்.
25ம் திகதி அதிகாலை கூடுதலான தண்ணீர் போவதாகவும் மிக மோசமாக தண்ணீர் பரவுவதாகவும் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் தெரிவித்ததையடுத்து அன்று அதிகாலை வேளையிலேயே அங்கு நான் செல்லும் போது அப்பகுதி வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கி காணப்பட்டதுடன் வீதிகள் விவசாய நிலங்கள் எல்லாம் ஒரே குளமாகவே காட்சி தந்தன.
மிகவும் சிரமப்பட்டு உன்னிச்சைக்குளத்தடிக்கு சென்ற பொது அங்கு நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அதிகாரிகளையோ அல்லது பொறியியலாளர்களோ காவலாலியோ யாரையும் காணவில்லை.
குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு 15 அடி தண்ணீரை திறந்து விட்டு போயுள்ளார்கள் என்பதை நான் அவ்விடத்தில் விளங்கி கொண்டேன்.
நீர்ப்பாசனத்திணைக்களத்தின் ஒரு அதிகாரியும் அவ்விடத்தில் இல்லா நிலையில் தப்பித்தவறி சிறிய ஒரு வெடிப்பு குளத்தில் ஏற்பட்டிருந்தாலும் எப்படி அதனை சமாளிக்க முடியும் என நான் கேட்க விரும்புகின்றேன்.
நாங்கள் அப்பகுதிக்கு சென்றிருந்ததை அப்பகுதி இராணுவத்தினர் கூட அறிவார்கள்.
ஒரு ஏழை விவசாயி இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தால் யார் அதற்கு பொறுப்புச் சொல்வது.
19ம் திகதி தண்ணீரை திறந்து விடுங்கள் என நாங்கள் கூறியது போல நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள் திறந்து விட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
இந்த விடங்களை அதிகாரிகள் அனைவருக்கும் நான் உடனேயே அறிவித்தேன்.
இந்த 15 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 6000 ஏக்கர் நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 10 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வயலின் அணைக்கட்டுக்கள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளன. இந்த போகத்தின் ஆரம்பம் என்பதால் அனைத்து நெற் பயிர்களும் அழிந்து போய் விட்டன. இதனால் சுமார் பத்துக் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தமது வாழ்வாதாரம் அழிந்து சேதமாகியுள்ள நிலையில் அவர்கள்; பெரும் கவலையுடன் காணப்படுகின்றனர்
இந்த வகையில் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்ட நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அதிகாரியை இடமாற்றுவதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முன் வரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக நீர்ப்பாசனத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.பி.எம்.அசாரிடம் கேட்ட போது கடந்த வாரம் நாட்டில் வெள்ள அனர்த்த நிலையின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்லாயிரக்கணக்கான மக்களையும் விவசாயிகளையும் பாதுகாக்கும் நோக்குடன் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகளானது உரிய முறையிலும் பாதுகாப்புடனும் இயக்கப்பட்டது.
இந்த நேரத்தில் தேவையானளவு தேவையான நேரம் வான் கதவுகள் திறக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது இந்த மாவட்டத்தின் அனைவரின் நலன் கருதியே செய்யப்பட்டது.
சீரற்ற கால நிலையால் ஏற்பட்ட விளைவாவவே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இது தொடர்பாக சகல உயரதிகாரிகளுக்கும் நாம் அறிவித்துள்ளோம். உரிய நேரத்தில் உரிய அளவு உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு மாட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாத்துள்ளோம்.
சரியான நடவடிக்கையை நாங்கள் எடுத்தோம். 15 அடி தண்ணீர் திறந்து விடுவதுதான் அவ்விடத்தில் செய்யும் சரியான நடவடிக்கையாகும் எனக் கருதியே அந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
இது கால நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிகழ்வாகும். எங்களுக்கு சரியான ஒரு வடிச்சல் ஆறு இல்லாதது ஒரு மிகப் பெரிய காரணமாகும். அந்த வடிச்சலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர் காலத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் வராத வகையில் எவ்வாறு இதனை தீர்க்கலாம் என்பதையும் ஆராய்ந்து வருகின்றோம்.
இந்த தண்ணீரை திறந்து விட்டது தொடர்பில் நீர்ப்பாசனத்திட்ட விவசாய முகாமைத்துவக் குழுவோடு எமது அதிகாரிகள் கலந்துரையாடியே மேற் கொண்டதாக நான் அறிகின்றேன்.
எமது அதிகாரிகள் விவசாய முகாமைத்துவக் குழுவோடு கலந்துரையாடியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் பணிப்புரையும் விடுத்திருந்னே. எமது உத்தியோகத்தர்கள் உரிய நேரத்திற்கு சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.
நாங்கள் உரிய நேரத்திற்கு அந்த குளத்தின் தண்ணீரை திறந்து விடாமல் விட்டிருந்தால் குளம் உடைப்பெடுத்திருக்கும் அதனால் ஏற்படும் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்
அதனால் நாங்கள் தண்ணீரை திறந்து விட்டது சரியானது எனவும் இது தொடர்பில் யாருக்கும் பொறுப்புடன் பதில் கூற தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
இதன் பின்னணியில் உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள விவசாயிகளுக்கும் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு மிடையில் இது ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்ட நீப்பாசனத்திணைக்களத்தின் அனுபவமற்ற உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யுமாறு கோரி மட்டக்களப்பு உன்னிச்சை விவசாயத் திட்டத்திலுள்ள பெருமளவிளான விவசாயிகள் கடந்த (30.5.2018) புதன்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட மொன்றில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்திற்கருகில் ஒன்று சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்ட பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது மட்டக்களப்பு உன்னிச்சை குளத்திலிருந்து கடந்த 25ம் திகதி நீரைத் திறந்து விட்டு முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் வலியுறுத்தினர் அது தொடர்பான மகஜரொன்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடத்தில் கையளிக்கப்பட்டது.
அதே போல நீர்ப்பானத்திணைக்கத்தின் உத்தியோகத்தர் ஒருவர் விவசாயி ஒருவரினால் உன்னிச்சைக்குளத்திடியில் வைத்து தாக்கப்படடதை கண்டித்து நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உத்தயோகத்தர்கள் ஊழியர்கள் கறுப்பு பட்டியணிந்து (30.5.2018) புதன்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியொன்றில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் அருகில் ஒன்று திரண்ட இந்த உத்தியோகத்தர்கள் ஆர்பாட்ட பேரணியாக மட்டக்களப்பு நகருக்குள் சென்று மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 25ம் திகதியன்று காலையில் உன்னிச்சை குளத்தடியில் வைத்து நீர்ப்பாசன திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டார். அவரை விவசாயி ஒருவர் தாக்கியிருந்தார். இதனை வண்மையாக கண்டிப்பதாகவும் தாக்கிய விவசாயிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தியதுடன் இது தொடர்பான மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளையும் நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகளையும் ஒன்றாக வைத்து இந்த விவகாரத்தை சுமூகமாக பேச்சு வார்தையின் மூலம் தீர்த்து வைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் இந்த நிலையிலேயே இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன.
இது தொடர்பாக விசாரணையொன்றை மேற் கொள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எனினும் உன்னிச்சை நீர்ப்பாசனத்திட்ட விவசாயிகளுக்கும் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அதிகாரிகளுக்குமிடையில் இவ்வாறான முறன்பாடுகள் தொடர்வது ஒரு ஆரோக்கியமானதல்ல என்பதே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பலரின் கருத்தாகும்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment