இலங்கையின் வரலாற்றில் ஒரு முஸ்லிம் அரசன் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

இலங்கையின் வரலாற்றில் ஒரு முஸ்லிம் அரசன்

பண்டைய சிங்கள வரலாற்று நூல்களில் மகாவம்சம், ராஜாவலிய, கிரா சந்தேசய், குருநாகல் விஸ்தரய, தீபவம்சம், பன்சிய பனஸ் ஜாதக பொத்த, சமத்தயா சாதிகா, செலலிஹினி சந்தேசிய, பரவி சந்தேசய, விசுத்திமக்க சச தாவத்த, குத்திலகாவிய, தம்பியா அட்டுவா ஹட்டப்பதய, தர்ம பீதிகாவ எனும் நூல்கள் பிரசித் தமானவையாகும்.

இவற்றில் மகாவம்சமும், குருநாகல விஸ்தரயவுமே இலங்கையில் ஒரு முஸ்லிம் மன்னன் ஆட்சி புரிந்தது பற்றி தெளிவான விபரங்களைக் குறிப்பிடுகின்றன. இவரது தலைநகரம் “எதுகல்புர” என அன்று அழைக்கப்பட்ட தற்போதைய குருநாகலை யாகும்,

இங்கு அத்தாகல (யானைக் கற்பாறை). இப்பாகல் (ஆமைக் கற்பாறை), குருமினகல் (வண்டு கற்பாறை), கிம்புலாகல (முதலைக் கற்பாறை), எலுவாகல் (வெள் ளாட்டுக் கற்பாறை), ஆந்தாகல் (விலாங்கு மீன் கற்பாறை), லுனுகெட்டகல (உப்புக்கட்டி கற் பாறை), கோனிகல (கோனிப்பைக் கற்பாறை) என 8 கற்பாறைகள் – இருக்கின்றன. இவற்றில் யானைக் கற்பாறையே பெரிது என்பதால் குருநாகலையின் பழைய பெயர் எதுகல்புர என்றே அமைந்திருந்தது.

ஆந்தாகல ஒரு பக்கம் இப்பாகலவும் குருமினி கலவும் மறுபக்கம் மேட்டு நிலப்பரப்பாக பமுனுகெதர நடுவில் குருநாகல வெவ ஏரி ஆகியவை காணப்பட்டன. தண்ணீர் வசதியை வழங்கிய அந்த ஏரி சதுப்பு நிறப் படிகளோடும். நீராடு துறைகளோடும் கவர்ச்சியாகக் காணப்பட்டது என்கிறார்கள்.

அங்கு ஆட்சிபுரிந்த முஸ்லிம் அரசன் யார் எனப்பார்ப்போம்.
1273 ஆம் ஆண்டு முதல் 1284 ஆம் ஆண்டு வரை 11 ஆண் டுகாலம் வன்னியின் குருநில மன்னர்களைத் தோற்கடித்து தம்பதெனியாவைத் தலைநகராக்கி முதலாம் புவனேகபாகு ஆட்சி புரிந்த போதுதான், வன்னிக் குறுநில மன்னர்களின் சார்பாக மதுரை மன்னன் குலசேகர பாண்டியனின் படை தம்பதெனியாவை ஆக்கிரமித்தது. உடனே யாப்பவைக்குத் தனது தலைநகரை மாற்றிய முதலாம் புவனேகபாகு, யெமனுடனும் எகிப்துடனும் தொடர்பு கொண்டான்,

அப்போது யெமன் நாட்டு அரசராக 1290 ஆம் ஆண்டு முதல் 1295 ஆம் ஆண்டு வரை சுல்தான் யூசுப் இப்னு உமர் ஏடனைத் தலை நகராக்கி ஆட்சிபுரிந்து வந்தார்.

முதலாம் புவனேகபாகுவின் தூதுக் குழு அவரைக் காணச் சென்றது. யெமன் நாட்டு சரித்திரக் குறிப்பேடு முதலாம் புவனேகபாகுவை அபூநெக்கபாலெபாபாஹ் என்கிறது. இது புவனேகபாகு யாப்பக ஹூவ எனும் சிங்களச் சொற்களின் அரபுத் திரிபாகும், அப்போது எகிப்துக்கும் கூட ஒரு தூதுக்குழு சென்றே இருந்தது.

அந்த பதிவிலும் அபூநெக்கபாலெபாபாஹ் என்றே இருக்கிறது. அல்ஹாஜ் அபூஉத்மானின் தலைமையிலான குழு இலங்கைக் கப்பலில் எகிப்துக்குப்போய் ஹோமோஸ் எனும் துறைமுகத்தில் இறங்கி எகிப்தில் 10 நாட்கள் தங்கியதாக எகிப்தியப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

வரலாற்றாசிரியர் எச்.டப்ளியூ கொட்ரிங்டன் இது பற்றி குறிப்பிடுகையில், இலங்கை அரசின் தூதுவர் மாளிகைக்கு வந்து ஒரு கடிதத்தைக் கொடுத்து எங்கள் மன்னனே கைப்பட எழுதியது இது என்றார். அந்த கடிதம் தங்கப் பெட்டியில் வைக்கப்பட்டு தூஸ் போன்ற ஒரு பொருளால் சுருட்டப்பட்டிருந்தது. தென்னை மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டதே தூஸ் என்கிறார்கள்.

அப்போது அந்த கடிதத்தை வாசிக்க யாருமே எகிப்திய அரசனுக்குக் கிடைக்கவில்லை, எனவே அதன் உள்ளடக்கத்தை வாசிக்கும்படி இலங்கைத் தூதுவரிடமே அவர் கேட்டுக் கொண்டார்.

அதனால் எகிப்தில் அரசனுக்கு வாசிக்கும் சிரமம் குறைந்தது.

* இலங்கையே எகிப்து எகிப்தே இலங்கை, எனது தூதுவர் இலங்கைக்குத் திரும்புகையில் அவரோடு ஒரு எகிப்தியத் தூதரும் அனுப்பப்பட வேண்டும் என்றே விரும்புகின்றேன்,

* என்னிடம் பிரமிக்க வைக்கும் அதிக அளவு முத்துக்களும் பலாக மாணிக்கங்களும் உள்ளன., சில கப்பல்களும் யானைகளும் மஸ்லின் துணிகளும் ஏனைய பொருட்களும் உள்ளன.

* நேர்மையான வியாபாரிகளால் என்னிடமிருந்து பசும் மரமும் – கறுவாவும் உங்களிடம் கொண்டு வரப்படும் (வண்ணப் பொருட்கள் செய்யப்பயன்படும் பிரேசில் மரமே பசும் மரமாகும்).

* எல்லா வகை வியாபாரப் பொருட்களும் எம்மிடம் உண்டு.

* எமது நாட்டில் வளரும் ஒரு வகை மரத்தால் ஈட்டிகளைத் தயா ரிக்கலாம்.
* வருடாந்தம் 20 கப்பல்களை நீங்கள் என்னிடம் கேட்டாலும் தருவேன்.

* உங்கள் நாட்டு வியாபாரிகள் எனது அரசோடு விரும்பியவாறு வர்த்தகம் புரியலாம்.

* அயயா நாட்டு அரச அதுயோபு யெமனுக்காக என்னோடு தொடர்பு கொள்ள வந்த போதும் நான் உங்கள் மீது வைத்திருக்கும் அபிமானம் காரணமாக அவரைத் திருப்பியனுப்பி விட்டேன்,

* என்னிடம் 27 மாளிகைகள் உள்ளன, அவற்றின் பொக்கி ஷங்கள் பலவகை மாணிக்கங்க ளாலும் நிரம்பியுள்ளன.

* எனது அதிகாரத்துக்குட்பட்டே முத்துக்குளிப்பும் இருக்கிறது. – இதனால் கிடைக்கும் எல்லா முத் துக்களும் எனக்கே சொந்தம். என்றெல்லாம் அக்கடிதத்தில் இருந்தன என்கிறார். அதைக் கேட்ட எகிப்திய சுல்தான், அபூ உத்மானுக்கு கௌரவமளித்ததோடு முதலாம் புவனேகபாகுவுக்கென ஒரு கடிதத்தையும் கையளித்தார்.

எகிப்தின் வலிமை காரண மாகத்தான் முதலாம் புவனேகபாகு யெமனை மதிப்பிறக்கம் செய்து எழுதியிருக்க வேண்டும். இவ்வாறு அரபு நாடுகளோடு முதலாம் புவனேகபாகு தொடர்பு கொள்வதைக் கேள்விப்பட்டதும் மதுரை மன்னன் குலசேகர பாண்டியன் உடனே பெரும் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். காரணம், டில்லியில் அலாவுத்தீன் கில்ஜியின் ஆட்சி இருக்கையில் இலங்கையில் முஸ்லிம் நாடுகளின் தலையீடு இருப்பது ஆபத்து என அவர் கருதியதேயாகும்.

யாழ்ப்பாண சங்கிலி மன்னனின் படை அதற்கு உதவியளித்து யாப்பஹுவவைக் கைப்பற்றச் செய்து புனித தந்தத்தை மதுரைக்கு எடுத்துப்போய் குலசேகர பாண்டியனுக்குக் கையளிக்கச் செய்தது. அப்போது புனித தந்தத்தை வைத்திருப்போனே. அரசன் என சிங்கள மக்கள் நம்பியதால் 1284 ஆம் ஆண்டு முதல் 1302 ஆம் ஆண்டு வரை 18 வருட காலம் இலங்கையை மதுரை பாண்டிய நாடே ஆட்சி புரிந்திருக்கிறது.

ஆக, தமிழர்களிடமிருந்து இலங்கையைத் தற்காத்துக் கொள்ளவே அப்போது சிங்கள மன்னன் முஸ்லிம்களுக்கு வரி செலுத்தவும் செல்வங்களை வழங்கவும் முன் வந்திருப்பது இதிலிருந்து தெளிவாகிறது.

அதுபோல் முஸ்லிம்களுக்கும் அஞ்சியே தமிழர்கள் இலங்கையைக் கைப்பற்றியதும் தெரிகிறது. அப்போது டில்லியின் சுல்தான் அலாவுத்தீன் கில்ஜியின் தளபதியான மாலிக்கபூர் பாண்டிய நாட்டுக்குப் படையெடுத்து வரப்போவதைக் கேள்விப்பட்ட குலசேகர பாண்டியனுக்குத் தனது நாட்டின் சுயபாதுகாப்புக்காக இலங்கையிலிருந்த தனது படையை மீளப்பெறுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. எனினும் குலசேகர பாண்டியன் நிபந்தனைகளை விதித்தான்.

இந்நிலையைத்தான் மூன்றாம் பராக்கிரமபாகு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு குலசேகர பாண்டியனுக்குக் கீழ்ப்படிவதாகவும் வரி செலுத்துவதாகவும் அவரோடு போர் செய்வதில்லை எனவும் சத்தியம் செய்து தந்தத்தைக் கையேற்று இறைமையை மீட்டான்.

எனினும் அந்த இறைமை முழுமையானதாக அமையவில்லை . 8 ஆண்டுகள் நீடித்த அந்த பொம்மை அரசை சிங்கள மக்கள் வெறுத்தனர். மூன்றாம் பராக்கிரமபாகுவால் குலசேகர பாண்டியனின் விருப்பை மீறி நடக்க முடியாதிருந்ததும் வரி செலுத்தப்பட்டதும் அதற்குக் காரணங்களாக அமைந்தன.

இந்நிலையிலேயே இரண்டாம் புவனேகபாகு அந்த அடிமைத்துவ அரசைக் கைப்பற்றினான். இவனது அரசு 1310 ஆம் ஆண்டு முதல் 1325 ஆம் ஆண்டு வரை 15 வருடங்கள் தொடர்ந்தது. 1325 ஆம் ஆண்டு முதல் 1328) ஆம் ஆண்டு வரை மூன்று வருட காலம் இவரது மகன் வஸ்துஹிமி ராஜகலே பண்டார ஆட்சிபுரிந்தி ருக்கிறார்,

அப்போது மாலிக்கபூர் குலசேகர பாண்டியனைத் தோற்கடித்திருந் ததாலேயே மூன்றாம் பராக்கிரம் பாகுவை இரண்டாம் புவனேகபாகுவால் எளிதாகத் தோற்கடிக்க முடிந்தது.

இன்றேல் குலசேகர பாண்டியனுக்குக் கட்டுப்பட்டு இலங்கை தொடர்ந்தும் இருந்திருக்கும் எனலாம். ஆக, மூன்றாம் பராக்கிரமபாகுவிடமிருந்து அடிமைத்துவ இலங்கை அரசாட்சியை மீட்ட இரண்டாம் புவனேகபாகுவின் மகனே வஸ்துஹிமி ராஜகு மார எனும் மன்னனாவார்.

குருநாகல விஸ்தரய இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், இரண்டாம் புவனேகபாகுவுக்கும் அஸ்வத்தும் கிராமத்தில் பிறந்த அழகிய சோனகப் பெண்ணுக்கும் பிறந்த மகனே இவர் என்கிறது. எனினும் இவரை ஒரு முஸ்லிம் என அது குறிப்பிடவில்லை .

தாய் சோனகப் பெண் என மட்டுமே கூறுகிறது. சிங்கள மக்களின் முதன்மை வரலாற்று நூலான மகாவம்சமே வஸ் துஹிமி என இவரைக் குறிப்பிட்டு இஸ்லாத்தை தழுவியவர் எனவும் கூறுகிறது.

உண்மையையும் நிகழ்வுகளையும் மறுப்பதைக் கண்டு நான் சீற்றமுறுகிறேன். உண்மை உள்ளபடியே மகத்தானது. வாசியுங்கள், அதிசயப்படுங்கள் என வரலாற்றாசிரியர் கிப்பன் கூறுகிறார். அந்த வகையில் குருநாகல விஸ்தரயவும் மகாவம்சமும் காய்தல் -உவத்தலின்றி உள்ளதை உள்ளபடியே வெளியிட்டிருந்திருக்கின்றன.

அதனால் தான் பலர் இதை மறைக்க முயற்சி எடுபடாமற் போயிற்று. ” அப்போது குலசேகர பாண்டியன் இலங்கையைக் கைப்பற்றக் காரணம் முதலாம் புவனேகபாகு யெமனோடும், எகிப்தோடும் தொடர்பு கொள்ள முயன்றதே யாகும்,

குலசேகரனின் ஆக்கிரமிப் புக்கு முன் முதலாம் புவனேகபாகு யெமனுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி உதவிகோரியிருந்தார். “இன்றேல் இலங்கையில் ஒரு முஸ்லிம் மன்னன் ஆட்சிபுரிந்திருக்கிறார் எனும் உண்மை மறைந்தே போயிருக்கும். இரண்டாம் புவனேகபாகு முஸ்லிமாகி அப்பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்ததற்கு சரித்திரத்தில் எந்த குறிப்புக்களும் இல்லை. அப்படியானால் அந்தப் புரநாயகியாக அப்பெண்ணை வைத்திருந்தாரா? என்பதற்கான தகவலும் இல்லை .

முஸ்லிமல்லாத ஆணை முஸ்லிம் பெண் மணமுடிப்பதையோ முஸ்லிம் பெண் அந்தப்புர நாயகியாக இருப்பதையோ முஸ்லிம்கள் அனுமதிப்பதில்லை.

அந்த வகையில் இரண்டாம் புவனேகபாகு முஸ்லிமாகியே அப்பெண்ணை மணமுடித்திருக்கலாம் என யூகிக்கமுடிகிறது. அவரது மூத்த மனைவி சிங்களப் பெண். அவர் தங்கப் பல்லக்கில் போய்வருவதால் ரன்தோலி எனவும், இளைய மனைவியான முஸ்லிம் பெண் இரும்புப் பல்லக்கில் போய்வருவதால் யக்கடதோலி எனவும் அழைக்கப்பட்டனர்.

முஸ்லிம் மனைவியின் பெயர் ஆலியா எனவும் கூட ஒரு குறிப்பு உள்ளது. – முஸ்லிம் மனைவிக்கு தன் மூலம் பிறந்த மகனுக்கே அரசுரிமை வாரிசை வழங்க இரண்டாம் புவனேகபாகு ஏன் நினைத்தார். இதுவும் கூட அவர் ஒரு முஸ்லிமே என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.

அப்போது இந்தியா முஸ்லிம் ஆட்சியின் கீழ் இருந்ததால் இரண்டாம் புவனேகபாகுவின் செய்கை இலங்கையையும் முஸ்லிம் நாடாக்கிவிடும் என சிங்கள மக்கள் அஞ்சினர். இதனால் அரச வாரிசுரிமையை சிங்கள மனைவியின் மகனுக்கே பெற்றுக்கொடுக்க நாட்டு மக்கள் அணி திரண்டனர்.

இதனால் மூத்த மனைவியின் குடும்பத்தினர் இரண்டாம் புவனேகபாகுவையும் முஸ்லிம் மனைவி உட்பட அவரது குடும்பத்தினரையும் கொலை செய்தனர்.

எனினும் முடிக்குரிய பிள்ளை ஒரு சலவைப் பெண்ணால் கடத்தப் பட்டு பேருவளையில் வளர்க்கப் பட்டது.

வீரகல்புர தேவி பெற்ற மகன் சலவைப் பெண்ணால் அரண்மனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அப்போது 67 அந்தப்புர அழகிகளோடு தற்கொலை செய்து கொண்டதாகவும் வரலாற்றாசிரியர் யூஸ்டஸ் விஜேதுங்க குறிப்பிடுகிறார் அல்லவா? இது இரண்டாம் புவனேகபாகுவை இழிவுபடுத்தும் தகவலாகும்.

இவருக்கு அந்த முஸ்லிம் பெண்ணின் பெயர் தெரியவில்லை. அதனால் தான் யக்கட தோலிய, மெதகெட்டிய குமாரி – எனும் பெயர்களைப் போல் வீரகல் புரதேவி என்கிறார். ஆக மகனின் முஸ்லிம் பெயரும் இல்லை . – தந்தையின் முஸ்லிம் பெயரை மட்டும் கூறவா போகிறார்கள்?

ஆட்சியை 1325 ஆம் ஆண்டு நான்காம் பராக்கிரமபாகு இரண்டாம் புவனேகபாகுவிடமிருந்து கைப்பற்றியபோது வத் ஹிமி ராஜாவுக்கு 10 வயது. அவர் பேருவளையில் 5 வருடங்கள் வாழ்ந்து பின் குருநாகலைக்குப் படையோடு வந்து நான்காம் பராக்கிரமபாகுவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியபோது 15 வயது. அவர் படுகொலை செய்யப்பட்டபோது 18 வயது. ஆக மூன்று வருட கால ஆட்சி புரிந்த வஸ்துஹிமிராஜகலே பண்டார ஒரு முஸ்லிம் அரசராவார்.

இவரது இயற்பெயர் குராஷான் செய்யித் இஸ்மாயீல் என்பதாகும். இவர் வசமே புனித தந்தமும் இருந்திருக்கிறது.

இவரைப் பற்றி மகாவம்சம் குறிப்பிடுகையில் வஸ்துஹிமி அறஞ்செய்து நன்மை பெறமுயன்ற அரசனாவார். இவர் இஸ்லாத்தை தழுவியவராக இருப்பினும் தினந்தோறும் 1000 பிக்குகளுக்கு தானம் வழங்குவதை கடமையாகக் கொண்டிருந்தார், வருடா வருடம் மதச் சடங்கையும் தனது முடிசூட்டு விழாவையும் அரச கெளரவப்படி கொண்டாடி ஆரவாரமாகவும் வெற்றிவீரனாகவும் ஊரறியச் செய்தார் என்கிறது

வரலாற்றாசிரியர் ஜீ.சீ.மென்டிஸ் “இலங்கையின் ஆரம்பகால வர்லாறு” எனும் தனது நூலில் 1325 ஆம் ஆண்டு வரை இரண்டாம் புவனேகபாகு குருநாகலையில் இருந்து ஆட்சி புரிந்தார் என கூறியிருப்பது தவறாகும். இலங்கையில் 9 ஆம் ஆண்டு வரலாற்று பாட நூலில் நான்காம் பராக்கிரமபாகு 1325 ஆம் ஆண்டு வரை அங்கிருந்து ஆட்சி புரிந். திருந்ததாக குறிப்பிட்டுள்ளதே சரியான தரவாகும். எனினும் 1325 ஆம் ஆண்டுக்குப் பின் குழப்பம் ஏற்பட்டது என முடித்திருப்பது தவறாகும்.

மன்னர் குராஷான் செய்யித் இஸ்மாயீல் நான்காம் பராக்கிர மபாகுவை தோற்கடித்து ஆட் சியைக் கைப்பற்றியதும் 1328 ஆம் ஆண்டு வஸ்துஹிமிராஜகலேபண் டார் எனும் குராஷான் செய்யித் இஸ்மாயீல் படுகொலை செய்யப்பட்டதும் அதன் பின் ஆட்சியின் தலைநகரம் கம்பளைக்கு மாற்றப்பட்டதுமே அதில் குழப்பம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக ஒரே சொல்லில் ஒரு வரலாறே மறைக் கப்பட்டிருக்கிறது அல்லவா?

குராஷான் செய்யிது இஸ்மாயீல் கலே பண்டார வஸ்துஹிமிராஜ படுகொலை செய்யப்பட்ட விதம் பற்றி குருநாகல விஸ்தரய பின் வருமாறு குறிப்பிடுகிறது.

வஸ்து ஹிமி அரசவையின் வெறுப்புக்கு உள்ளாகியதால் அவரைக் கொல்ல அவர்கள் சதியை தந்திரமாகச் செய்தனர்.

அதன்படி எத்தாகல உச்சியில் பிரீத் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் விசேட மண்டபத்தையும் கட்டி மன்னனுக்கு ஆசனமும் வைக்கப்பட்டது. பிரித் வைபவம் உச்சநிலை அடைகையில் சதிகார நம்பிக்கை துரோகிகள் ஆசனத்தின் கால்களை அகற்றியதால் மன்னன் பள்ளத்தில் வீழ்ந்து பரிதாபமாக இறந்தார் என்கிறது.

அது பற்றி சரித்திராசிரியர் யூஸ்டஸ் விஜே துங்க குறிப்பிடுகையில், வஸ்து ஹிமியை ஒழிக்க எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காது அவர்கள் ஒரு தந்திர திட்டத்தை வகுத்தனர். மன்னனுக்கு எதிரான விரோதங்களை முடித்துக் கொள்ளட்டும் என விட்டு விட்டனர்.

அதன்படி முழு இரவும் பிரித் வைபவம் எத்தாகலயில் ஏற்பாடு செய்யப்பட்டு மன்னனுக்காக அழ கிய மண்டபம் கட்டப்பட்டது. நடு இரவில் தொடராகப் பிரித் ராகம், கேட்போரை ஒருவர்பின் ஒருவராக உறங்க வைத்தபோதும் சதிகாரர்கள் உறங்கவில்லை .

திடீரென ஏதோ முறியும் சத்தத்தோடு மனித அவலக் குரலும் கேட்டது. ஆம். எத்தாகலையின் உச்சியிலிருந்து ஒருவர் மரணத்தை நோக்கி உருண்டார். இதனால் சதிகாரர்களின் திட்டம் பலித்தது. அது ஒரு விபத்து எனக்காட்ட அவர்கள் எண்ணியபோதும் உண்மை வெளிப்பட்டது. என்கிறார். அதன் பிறகு 14 ஆண்டுகளாக குருநாகலையைத் தலைநகராகக் கொண்டு எவராலும் ஆட்சியமைக்க முடியவில்லை . மக்கள், சதிகாரர்களை கொலை செய்தனர். 1342 ஆம் ஆண்டு நான்காம் புவனேகபாகு கம்பளையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி அமைத்தார்.

குராஷான் செய்யித் இஸ்மாயீல் வஸ்துஹிமிராஜகலே பண்டார பௌத்தர்களின் புனித தந்தத்தை வைத்திருந்திருக்கிறார். பெரஹர உட்பட பௌத்தர்களின் புனித வைபவங்களையும் சிறப்பாக நடத்தியிருக்கிறார். பிரித் வைபவங்களிலும் சமுகமளித்திருக்கின்றார். அவரை பௌத்தர்களின் புனித வரலாற்று நூலான மகாவம்சமே புகழ்ந்துரைக்கின்றது.

அவரின் அருங்குணங்களைக் கண்டு சிங்கள மக்களே ஏற்றிப் போற்றியிருக்கிறார்கள். இவை ஆட்சியுரிமை வாரிசுகளுக்கும் இன, மத உணர்வாளர்களுக்கும் பெரும் சவால்களாகவே இருந்தன, |

எனவே, உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலவுவதையும் தொடராக ஏராளமான முஸ்லிம்கள் இலங்கைக்கு வருவதையும் முஸ்லிம் அல்லாத சில நாடுகள் வர்த்தக தொடர்புகளால் முஸ்லிம் நாடுகளானதையும் முன்வைத்து சதிகாரர்கள் புரட்சியை உருவாக்கிவிட்டனர்.

எனினும் அது தோல்வியுற்றது. வரலாற்றில் இலங்கையை ஆட்சி புரிந்த எந்த மன்னனையும் சிங்கள மக்கள் அவர் இறந்த பின் வழிபாடு செய்யவில்லை. வீரபராக்கிரமபாகு, கஜபாகு. துட்டகைமுனு, மகிந்தன், ராஜசங்கபோ, விகாரமகாதேவி, புவனேகபாகு அகியோரைப் புகழ மட்டுமே செய்கின்றார்கள். வஸ்துஹிமிராஜவுக்கு மட்டுமே வழிபாடு செய்கின்றார்கள்,

ஏ.ஜே.எம்.நிழாம் 
விடிவெள்ளி 
31/05/2018

No comments:

Post a Comment