நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக ரீ.கலையரசன் மற்றும் உப தவிசாளராக ஏ.கே.அப்துல் சமட் ஆகியோர் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக ரீ.கலையரசன் மற்றும் உப தவிசாளராக ஏ.கே.அப்துல் சமட் ஆகியோர் தெரிவு

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் உதவி தவிசாளராக ஏ.கே.அப்துல் சமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் இருவரின் பெயர்கள் தவிசாளருக்காக பிரேரிக்கப்பட்டது. இதனடிப்படையில் வெளிப்படையிலான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட த.கலையரசனிற்கு ஆதரவாக 08 வாக்குகளும், மற்றையவரான சுயேட்சைக்குழு உறுப்பினர் அமரதாச ஆனந்தனிற்கு 04 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 
இதேவேளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டார். உதவி தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஏ,கே.அப்துல் சமட் எதுவித போட்டியுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான இ.துரைராஜசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், கிழக்கு மாகாண தலைமயக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.இர்ஷாத், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி, மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன், நாவிதன்வெளி பிரதேசசபையின் செயலாளர் எஸ்.இராமக்குட்டி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எம்.எம்.ஜபீர்

No comments:

Post a Comment