கரவெட்டி பிரதேச சபை கூட்டமைப்பின் வசம் - தவிசாளராக ரி.ஐங்கரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 3, 2018

கரவெட்டி பிரதேச சபை கூட்டமைப்பின் வசம் - தவிசாளராக ரி.ஐங்கரன்

பருத்தித்துறை கரவெட்டி பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ள நிலையில், ரி. ஐங்கரன் வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது கூட்டம் இன்று காலை வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

பகிரங்க வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என 11 பேரும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என 10 பேரும் கோரினர். வாக்கெடுப்பு இரகசியமாகவே நடாத்தப்பட வேண்டும் என இராமநாதன் வலியுறுத்தினார். சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அவ்வாறு மேற்கொள்ள முடியாது என ஆணையாளர் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.

அவ்வாறானால் சட்டத்தை நாடவுள்ளதாக இராமநாதன் குறிப்பிட்டப்போது, அது உங்கள் உரிமை என ஆணையாளர் தெரிவித்து பகிரங்க வாக்கெடுப்பை நடாத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தங்கவேலாயுதம் ஐங்கரன் தவிசாளர் போட்டிக்கு பிரேரிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சதாசிவம் இராமநாதன் பிரேரிக்கப்பட்டார். இவ்விருவருக்கிடையில் பகிரங்கமாக வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்கப்பட்ட த. ஐங்கரன் பதினொரு வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் இவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ச. இராமநாதன் பத்து வாக்குகளை பெற்றார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பிரேரிக்கப்பட்ட கந்தர் பொன்னையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

31 உறுப்பினர்களைக் கொண்ட கரவெட்டி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 7 உறுப்பினர்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும் தமிழர் விடுதலை கூட்டணி 3 உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி 3 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி 2 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment