பிரதமருக்கு எதிரான பிரேரணை தொடர்பில் ஆராய இன்று கூடும் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 3, 2018

பிரதமருக்கு எதிரான பிரேரணை தொடர்பில் ஆராய இன்று கூடும் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான தமது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று வெளியிடவுள்ளது. நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் இன்று நடைபெறவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

தேசிய அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் நான்கு உறுப்பினர்கள், கூட்டு எதிர்கட்சியின் 51 உறுப்பினர்கள் என மொத்தமாக 55 பேரின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட, குறித்த பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தீவிரம்காட்டி வருகிறது.

இதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பேச்சுக்களும் பிரதமர் தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று காலை 10 மணிக்கு கூடி இந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய தினம் தீர்மானிக்கவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடம் இன்றைய தினம் கூடவுள்ளது.

இன்று இரவு 7 மணியளவில் கட்சியின் தலைமையகமான தாரூசலாமில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment