புத்தளம், பாலாவி பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். புத்தளம் பாலாவி மல்லிகாபுரம் பகுதியில் உள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பாலாவி பரிதாபாத் கிராமத்தைச் சேர்ந்த அஸீஸ் முஹம்மது ஆதில் (27) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர், பாலாவி மல்லிகாபுரம் பகுதியில் பழைய இரும்புகளை கொள்வனவு செய்யும் கடையொன்றில் தற்காலிகமாக தொழில்புரிந்து வந்துள்ளார்.
இன்று (04) காலை குறித்த கடையினுள்ளே உரிமையாளரின் மகனும், உயிரிழந்த நபருமே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடை உரிமையாளரின் மகன் காலை உணவு உட்கொண்டிருந்த போது, உயிரிழந்த நபர் பழைய இரும்புகளை உடைத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்தான், பாரிய சத்தத்துடன் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ௯றப்படுகிறது.
இச்வெடிப்புச் சம்பவத்தினால் கடைப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும், வெடிப்பு சத்தத்தைக் கேட்டதும் கடையை விட்டு வெளியே ஓடியதாகவும் கடை உரிமையாளரின் மகன் ௯றினார். அதன் பின்னர் மீண்டும் கடைக்குள்ளே வந்து பார்த்த போது கடையில் தொழில்புரிந்த குறித்த நபர் உயிரிழந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, சம்பவம் பற்றி புத்தளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.டி.பி. வீரசிங்க மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், விஷேட அதிரடிப் படையினரும், விமானப் படையினரும் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்ததுடன், சட்ட வைத்திய அதிகாரி புத்திக்க விதாரனவும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்தார். அத்தோடு, புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ஸ்ரீவர்தன சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் குறித்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸார், அது தவிர எவருக்கும் காயங்கள் எதுவும் இடம்பெறவுல்லை எனவும் தெரிவித்தனர். அத்துடன், உயிரிழந்த இளைஞனின் உடலின் வலது பக்க கை மற்றும் கால் என்பனவும் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எப்.எம். பாரிஸ் மரிக்கார், சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பு சம்பவம் எதனால் இடம்பெற்றது என்ற கோணங்களில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கம்பட்டுள்ளதாக தெரிவித்த புத்தளம் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
றஸ்மின் மொஹமட்
கற்பிட்டி
No comments:
Post a Comment