பிரதமரின் பணிப்பின்பேரில், இன்று அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபரை சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் பள்ளிவாசல் வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்தார். இதன்மூலம் பள்ளிவாசலுக்கு வருகின்ற மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. இருப்பினும் பள்ளிவாசல் நிர்வாகத்தை உள்ளடக்கிய வகையில் நாங்கள் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அம்பாறையில் தெரிவித்தார்.
அம்பாறையில் தாக்குதலுக்குள்ளான இடங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மெளலானா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் நேரடி விஜயம் மேற்கொண்டபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிதியத்துக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை அவசரமாக புனரமைத்து இயல்பு நிலைக்கு திரும்பவுதற்காக நீங்களும் இந்த நிதியத்துக்கு பங்களிப்புச் செய்யமுடியும். உதவ விரும்புகின்ற தனவந்தர்கள் அம்பாறை பள்ளிவாசல் தலைவர் ஹாரூன் உடன் தொடர்புகொள்ள முடியும் என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment