இலங்கையில் வருடாந்தம் 1700 சிசு மரணங்கள் சம்பவிக்கின்றன. இவை தாயின் கருவறையில் சிசு உருவாகி 28 வாரங்களின் பின் ஏற்படக்கூடிய கருச்சிதைவினால் ஏற்படக்கூடியனவாகும். குழந்தை பிறந்து முதல் வாரத்திற்குள் 1550 சிசு மரணங்கள் சம்பவிக்கின்றன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
சுகாதார பணிமனையில் உலக பிறவி குறைபாடுகள் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தாய் அல்லது தந்தையின் பரம்பரையில் காணப்படும் குறைபாடுகளே சிசு மரணங்களுக்கு பிரதான காரணங்களாகும். ஆரோக்கியமற்ற, வலது குறைந்த குழந்தைகள் பிறக்க கர்ப்பிணியின் சூழல், தாயிடம் காணப்படும் நோய்கள், மனநிலை, பாவிக் கும் மருந்து வகைகளின் தாக்கம் என்பன காரணமாகின்றன. அதேவேளை 35 சதவீதமான சிசு மரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இத்தகைய கருச்சிதைவானது ஆண்டுக்கு சுமார் 100000 கர்ப்பிணி தாய்மாருக்கிடையே நிகழ்கின்றது.
கருவுற்ற தாய் தனது குழந்தையின் பிரசவம் தொடர்பில் அக்கறையுடன் இருக்க வேண்டும். இதில் பெரும்பாலான தாய்மார் தனது உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை காட்டும் அதேவேளை தனது உள ஆரோக்கியம் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை.
இதனால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமற்றதாகவும் உடல் உபாதைகளுக்கு ஆளான குழந்தையாகவும் பிறக்கின்றன. சில தாய்மார்கள் மது அருந்தும் பழக்கமுடையவர்களாயின் பிறக்கும் குழந்தை கண்கள் ஒடுங்கியவாறும் வாயின் மேலுதடு சற்று தூக்கிய நிலையிலும் பிறக்க வாய்ப்புண்டு. ஆனால் இத்தகைய குழந்தைகள் ஆரோக்கியமானவர்கள் என நினைக்கின்றார்கள். ஆனால் அவையும் ஒருவித குறைபாடுகளாகும் எனப் பலருக்குத் தெரிவ தில்லை.
மேலும் பரம்பரையில் ஏதேனும் ஒரு குழந்தை பிறந்து சில நாட்களில் இறக்குமாயின் அல்லது ஏதேனும் குறைபாடுகளோடு பிறந்து இறக்குமாயின் அவ்வாறு இறந்த குழந்தைகளை கட்டாயம் மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் பொது மக்கள் அதை விரும்புவதில்லை. மூடநம்பிக்கைகளினால் தனது அடுத்த பிரசவத்தையும் முறையாக செய்ய முடியாமல் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க தவறுகின்றனர்.
மரபணு சோதனை செய்வதனூடாக குழந்தை இறக்க காரணம் என்ன, அடுத்த குழந்தைக்கும் அதே மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுமா போன்ற பல கேள்விகளுக்கான தீர்வினை கண்டறியலாம்.
எனவே குழந்தை பிறப்பு தொடர்பில் தாய், தந்தை விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும் தனது கர்ப்ப காலத்தில் பிரசவம் தொடர்பில் வைத்தியர்களால் முன்வைக்கப்படும் ஆலோசனை களை கேட்டு அவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment