நிதியமைச்சர் மங்கள சமரவீரவீன் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

நிதியமைச்சர் மங்கள சமரவீரவீன் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவீன் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக வட மாகாணத்துக்கான நிதியமைச்சர் மங்கள சமரவீர விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, கிளிநொச்சிக்கும் பின்னர் முல்லைத்தீவுக்கும் மங்கள சமரவீர சென்றிருந்தார்.

கிளிநொச்சியில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, முல்லைத்தீவு செல்லும் போது, காணாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்கும் சென்றிருந்தார்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், உறவுகள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு காணாமல் போனோருக்கான பணியகத்தின் உதவியை நாடுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னர் பல தடவைகள் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனப் பதிலளித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், தம்மை வந்து சந்தித்ததற்காக மங்கள சமரவீரவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது வடக்கிற்கான பயணத்தின் போது இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து உடனுக்குடன் டுவிட்டரில் பதிவுகளையும் படங்களையும் பதிவேற்றிய மங்கள சமரவீர, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்தது தொடர்பான எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்துள்ளார்.

No comments:

Post a Comment