“தனித்தனியாக மேடையமைத்து நீங்களும் பேசி விட்டீர்கள். நாங்களும் பேசி விட்டோம். நாமிருவரும் மக்கள் மன்றத்தில் ஒரே மேடையில் அமர்ந்து நேருக்கு நேராக பேச வேண்டிய காலம் வந்து விட்டது. உங்களது உண்மைத் தன்மையில் நம்பிக்கையிருந்தால் நாம் ஒரே மேடையில் அமர்ந்து பேசுவதற்கு முன்வர வேண்டும்” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (05.02.2018) மாலை அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கான பதிலை இன்றைய (06.02.2018) மதியம் 12.00 மணிக்கு முன்பாக தெரிவிக்கும் படி NFGG தவிசாளர் கேட்டுக் கொண்டிருந்த போதிலும் அதற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இராஜாங்க அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
“தேர்தல் பிரச்சார மேடைகளில் நாகரீகமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளப் போவதாக ஆரம்பத்தில் வாக்குறுதியளித்த நீங்கள் இப்போது அதற்கு நேர் மாற்றமாக உங்கள் வழமையான வழிமுறைக்கு வந்து சேர்ந்திருக்கின்றீர்கள். பொய்களைப் புனைந்தும் உண்மைகளை திரிவு படுத்தியும் எம்மீதான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துமுள்ளீர்கள். உங்கள் தொண்டர்களும் இதனை போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.
உங்கள் ஆதாரபூர்வமற்ற அநியாயமான குற்றச்சாட்டுகளுக்கு நாம் ஏற்கனவே அறிவு பூர்வமான ஆதாரபூர்வமான விளக்கங்களை அளித்து விட்டோம். இருப்பினும் உண்மையினை ஏற்று தவறுகளை திருத்திக்கொள்கின்ற நேர்மையும் முதிர்ச்சியும் உங்களிடம் இன்னும் இல்லை என்பதனை தொடர்ந்தும் அவதானிக்கும் போது பெரும் கவலையாக இருக்கிறது.
நேற்றிரவு உரையாற்றிய நீங்கள் இட்டுக்கட்டப்பட்ட அபாண்டமான பொய்களை மீண்டும் தெரிவித்திருக்கிறீர்கள். (அவற்றுக்கும் நாம் தெளிவான விளக்கங்களை பகிரங்கமாக வழங்குவோம்.) அதிலொன்று, சில தினங்களுக்கு முன்னால் பதுரியா பிரதேச உங்களது வேட்பாளர் ஒருவர் தொடர்பான குற்றச்சாட்டை நான் முன்வைத்த வேளை இரண்டு பேர் மேடையில் ஏறி ஆதாரம் கேட்டதாகவும், அப்போது நான் பதில் கூற முடியாமல் திணறியதாகவும், அதனால் அவசர அவசரமாக கூட்டத்தை முடித்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறீர்கள். அப்படி எதுவுமே நடக்கவில்லை. கூட்டத்தில் நேரில் பங்கு பற்றிய பொதுமக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றார்கள்.
உண்மை இப்படியிருக்க ஏன் பொய்களைக் கூறி உங்கள் மரியாதையை மேலும் மேலும் குறைத்துக் கொள்கின்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அத்தோடு குறித்த உங்களது வேட்பாளரின் துஸ்பிரயோகம் தொடர்பான சாட்சியும் வாக்கு மூலமும் என்னிடம் இருக்கின்றது. ஆதாரங்கள் இல்லாத எதனையும் நான் கூறவில்லை. எனவே, நீங்கள் உங்கள் வழிமுறையை அல்லாஹ்வுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். கிடைக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையினை உறுதி செய்து பேசுகின்ற பக்குவத்தை இறைவன் இனிவரும் காலங்களிலாவது உங்களுக்குத் தரவேண்டும்.
மேலும், உங்களது ‘ஊழல்’ மாநாட்டில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பிலான விரிவான பதில் விளக்கங்களை எமது ‘உண்மை’ மாநாட்டில் நாங்கள் முன் வைத்திருந்தோம். அத்தோடு, நாம் குறித்த விடயங்களுக்கான ஆவண ரீதியிலான சகல ஆதாரங்களையும் முன்வைத்திருந்தோம். அவைகளின் பிரதிகள் உங்களுக்கு அவசியப்படின் அதை அனுப்பி வைக்க முடியும். நாம் முன்வைத்த விளக்கங்களை நீங்கள் ஒருமுறை முழுமையாக கேட்டு தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அத்தோடு எமது கருத்துக்களையும் நாம் முன்வைத்த ஆதாரங்களின் உண்மைகளையும் நீங்கள் முழுமையாக கிரகித்துக்கொள்ளவும் வேண்டும்.
ஏனெனில், பதுரியா பகுதியில் நீங்கள் நடாத்திய கூட்டமொன்றில், 'நாம் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்களில் எதனையும் நிரூபிக்க முடியாமல் தடுமாறினார்கள்' என தெரிவித்திருக்கிறீர்கள். எமது மாநாட்டில் கலந்து கொண்ட அத்தனை பேரும் உண்மைகளைப் புரிந்து கொண்டுள்ள நிலையில் நீங்கள் மாத்திரம் இவ்வாறு கூறித்திரிவது, உங்களது நம்பகத்தன்மையினை மேலும் மேலும் பாழ்படுத்தும் செயலாகஅமையும்.
எனவே, ஒரு விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முன்னால் முழுமையாக அதனைக் கேட்டறிந்து கிரகித்துக்கொண்டு பதிலளிப்பதே உங்களுக்கு பாதுகாப்பானது என்பதே எனது தாழ்மையான ஆலோசனையாகும்.
மேலும், எமக்கெதிரான இன்னும் பல புதிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ‘சதி’ என்ற பெயரில் எதிர்வரும் 7 ம்திகதி முன்வைக்க உள்ளதாகவும் அறிகிறேன். 7ம் திகதியோடு தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடையும் நிலையில், அதன் பின்னர் பதில் விளக்கம் எதனையும் நாம் வழங்கிவிடவும் கூடாது; மக்கள் தெளிவாக விடயங்களை விளங்கிக் கொள்ளவும் கூடாது என்ற தந்திரத்தோடுதான் இவ்வாறு செய்ய முனைகிறீர்கள் எனநம்புகிறேன்.
நீங்கள் ‘ஊழல்’ என்ற ஒரு மாநாட்டினைக்கூட்டி உங்கள் தரப்பு விடயங்களை சொன்னீர்கள். அதற்குரிய பதில் விளக்கங்களை ‘உண்மை’ மாநாட்டில் நாமும் முன்வைத்திருக்கிறோம். இந்த விடயங்கள் பற்றி நீங்கள் தேர்தல் பிரச்சார இறுதி தினத்தில் பேச முனைந்தால் அது உங்களது இயலாமையையே நிரூபிப்பதாகவே அமையும். இந்த விடயங்களை நீங்களும் நாங்களும் தனித்தனியாக இனிமேலும் பேசிக்கொண்டிருப்பது பொருத்தமல்ல. நாமிருவரும் மக்கள் மன்றத்தில் நேருக்கு நேராக பேச வேண்டிய காலம் வந்து விட்டது. அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, உங்களது விடயங்களின் உண்மைத்தன்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமென்றால் இவற்றை நாம் ஒரே மேடையில் அமர்ந்து, மக்கள் முன்னிலையில் பேச முன்வருமாறு நான் உங்களை அழைக்கின்றேன். எஞ்சியிருக்கின்ற இரண்டு தினங்களுக்கும் நாம் இதனைச் செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறேன்.
இதற்கான உங்கள் பதிலை இன்றைய நாளை மதியம் 12 மணிக்கு முன்பாக தெரிவித்தால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய முடியுமெனவும் கருதுகின்றேன். உங்களது பதிலை விரைவில் எதிர்பார்க்கின்றேன்.”
No comments:
Post a Comment