நிந்தவூரில் சூடுபிடித்துள்ள அரசியல் களம் - பகுதி 03 - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 6, 2018

நிந்தவூரில் சூடுபிடித்துள்ள அரசியல் களம் - பகுதி 03

ராவணன் சீதையை சிறை வைத்தது போல முஸ்லிம் காங்கிரசை அதன் தலைவர் சிறை பிடித்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு ஏற்கப்படக்கூடியதா? அதனை மீட்கும் ராமர் போராட்டமே இந்தத் தேர்தலில் மயிலின் வகிபாகம் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?? தீர்மானிப்பது நீங்களே...

நிந்தவூரைச் சேர்ந்த மாண்புக்குரிய சுகாதார பிரதி அமைச்சரை நிந்தவூர் மக்கள் அதிகம் நேசிக்கின்றனர். அதிகம் நம்புகின்றனர். அவரிடம் அதிகமான சேவைகளை எதிர்பார்க்கின்றனர். இப்போதைக்கு அவரது பாராளுமன்ற தலைமைத்துவத்தில் அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக,

“முஸ்லிம் காங்கிரஸின் மீது கணிசமான மக்கள் அதிருப்தியுற்றிருக்கிறார்கள்” என்கிற கூற்றை முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இல்லை என்று வாதிடுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதே. அதற்காக கட்சி என்னென்ன விடயங்களில் கவனமெடுக்க வேண்டும் என்பதை அந்தந்தப் பிரதேசங்களின் கட்சிப்பிரதிநிதிகள் அவசரமாக திட்டமிட வேண்டும். அநேக மக்களின் கூற்று “கட்சி தேவை. ஆனால், இந்த டிசைன் இல் கட்சி கட்சி மாதிரியே இல்லை” என்பது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் மிக முக்கியமான கட்சி. கிழக்கு மக்கள் முஸ்லிம்களின் ஒரே உரிமைக்குரலாக இந்தக் கட்சியே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால். பெருந்தலைவரின் மறைவுக்குப் பின் கட்சி மக்களுக்காக ஆற்றிய சேவைகள், பெற்றுத்தந்த உரிமைகள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பது கசப்பான உண்மை. ஆக, கட்சி தன்னை மீளக்கட்டமைக்க வேண்டிய முக்கிய தருணமே இது.

கட்சியின் மீதான அதிருப்தியைப் பயன்படுத்தியே ஏனைய முஸ்லிம் கட்சிகள் கிழக்கின் மீது படையெடுக்கின்றன. கட்சியின் மீதான அதிருப்திதான் பல முக்கிய உறுப்பினர்களும் கட்சியை விட்டு விலகி வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதற்கும் காரணமாகும்.

நிந்தவூர் அரசியலைப்பொறுத்தவரை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கவர்ச்சிதான் முஸ்லிம் காங்கிரஸ் மீதான எதிர்ப்புக்குக் காரணம் என்று சொல்லவே முடியாது. உண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கடந்த பொதுத்தேர்தலில் அளிக்கப்பட்ட 2800 வாக்குகளும் வழமையான முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களும், புதிதாக சில எதிர்ப்பாளர்களும் இணைந்த வாக்குகள்தான்.

நிந்தவூர் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசையோ, அதன் தலைவரையோ தங்களுக்குப் பொருத்தமான தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் தயாரில்லை என்பதே நிதர்சனம் . ஆனால், தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீதான அதிருப்தியே வலுக்கட்டாயமாக அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மீது திருப்பியுள்ளது. ஆக, இங்கே முஸ்லிம் காங்கிரஸ் சீர்செய்யப்படும் பட்சத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செல்வாக்கினை இழக்கும் அபாயம் காணப்படுகிறது அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிக அதிகமான சேவைகளையும், அபிவிருத்திகளையும் நிந்தவூர் மண்ணுக்கு ஆற்றத் தொடங்கினால் முஸ்லிம் காங்கிரஸ் செல்வாக்கினை இழக்கும் அபாயம் காணப்படுகிறது.

ஆக, நிந்தவூர் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மயிலுக்கான பிரச்சாரம் என்பது வெளிவாரியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கான ஆதரவு அலை என்று கொள்ள முடியாது. (உள்வாரியாக அக்கட்சித் தலைவரின் எண்ணம் கட்சியை இங்கே வேர்பதிக்க வைப்பதாகவே இருக்கும்). மாறாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீதான நேரடிப்போராகவே அது அமைகிறது (இதனை முன்னாள் தவிசாளர் தாஹிருக்கான அலை என்றும் சொல்கின்றனர்) .

மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட “முஸ்லிம் காங்கிரசை மீட்க வேண்டும்” என்றே கூக்குரல் எழுப்புகின்றனரே தவிர மயில் கட்சி வேரூன்ற வேண்டும் என்று இதுகாறும் சொல்லவில்லை. தவிர, ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு என்கிற வண்ணத்துப்பூச்சியும், மயிலும் பன்னிரண்டு அம்ச உடன்படிக்கையின்படியே மயில் சின்னத்தில் களமிறங்கியதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பதிலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மயில் வேட்பாளர்களையும், அக்கட்சியையும் ஆட்சிபீடம் ஏற விடாமல் தடுப்பதற்கு முன்னாள் தவிசாளரினதும், அவரது காலத்தில் பிரதேச சபையில் இடம்பெற்ற ஊழல்களினதும் கனதியே முக்கிய காரணம் என்கின்றனர். அதற்காக அக்கட்சி புத்தகம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது. ஆனால், பொலிசாரும், மாவட்ட தேர்தல் திணைக்களமும் அப்புத்தக விநியோகத்துக்கு எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. என்றாலும், முன்னாள் தவிசாளர் ஊழல்வாதி என்றும், அவர் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் அது பிரதேச வளர்ச்சியை பாதிக்கும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் காட்டமாக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. அதேபோல முஸ்லிம் காங்கிரஸும் ஊழல்களில் ஈடுபட்டதாக சில குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் உண்மைத்தன்மையை இறைவனே நன்கறிந்தவன்.

உண்மையில், இத்தேர்தலில் எக்கட்சி வெற்றி பெற்றாலும் வெற்றிபெறும் கட்சி மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ளத்தக்க செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 
நிந்தவூரில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் கூட அக்கட்சியை மீளக்கட்டமைத்தே ஆக வேண்டும் என்பது பலரதும் ஏக்கமாக இருக்கிறது அல்லது மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றால் எவ்வ்வகையில் அவர்கள் கட்சியை மீட்கப்போகிறார்கள் என்பதும் ஒரு கேள்விக்குறிதான் ??

எது எவ்வாறாயினும், எக்கட்சி வெற்றி பெற்றாலும் அது அடுத்த பிரதேச சபை ஆட்சிக்காலத்தில் மக்களையே இறுதி வெற்றியாளராக ஆக்கவேண்டும் . பரந்துபட்ட சேவைகள், கல்வி தொடர்பான அபிவிருத்திகள், முறையான உட்கட்டமைப்பு வசதிகள் என்று எந்தவித பேதமுமற்ற அபிவிருத்தியை வெற்றி பெறப்போகும் கட்சி வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மக்கள் யாரை நேசிக்கிறார்கள், யாரை நிராகரிக்கிறார்கள் என்பது பற்றிய கணிப்பினை இன்ஷா அல்லாஹ் இறுதி அலசல் பகுதியில் அலசலாம்...

ஷிப்லி அஹமட்
விரிவுரையாளர்
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
ஒலுவில்

No comments:

Post a Comment