பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 6, 2018

பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு தீவிரவாத ஒழிப்புக்காக வழங்கும் நிதியை நிரந்தரமாக நிறுத்தக்கோரும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது.

ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை என சமீபகாலமாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சில நிதியுதவிகளும் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டொலர்களை வாரி வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆவேசமாக குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான்கள் மற்றும் ஹக்கானி குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அளிக்கவிருந்த 20 லட்சம் டொலர் நிதியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார்.  

இதற்கிடையில் அமெரிக்காவின் ஆளும்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறூப்பினரான ராண்ட் பால் என்பவர்
"அமெரிக்க நாட்டின் தேசிய கொடியை எரித்தும், அமெரிக்கா ஒழிக என்று கோஷமிட்டும் வரும் நாடுகளுக்கு அமெரிக்கா சல்லிக்காசு கூட கொடுக்க கூடாது. பாராளுமன்றத்தில் நான் விரைவில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கிறேன். பாகிஸ்தானுக்கு அனுப்பும் பணத்தை வைத்து நமது தாய்நாட்டில் சாலைகள், பாலங்கள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த மசோதா வழிவகுக்கும்" என தனது வீடியோ செய்தியில் ராண்ட் பால் குறிப்பிட்டிருந்தார்.

ராண்ட் பால் வெளியிட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,
"நல்ல யோசனை ராண்ட்’ என்று அவரை பாராட்டியும் இருந்தார். அமெரிக்க பாராளுமன்ற கீழ்சபையில் சமீபத்தில் ராண்ட் பால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். 

இந்நிலையில், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அளித்துவரும் நிதியை நிரந்தரமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அயல்நாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையை வலியுறுத்தி பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இன்று மேலும் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தெற்கு கரோலினா எம்.பி. மார்க் சான்போர்ட் மற்றும் கென்ட்டுக்கி எம்.பி. தாமஸ் மேஸி ஆகியோர் தாக்கல் செய்த இந்த மசோதாவில் பாகிஸ்தான் தெரிந்தே தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த இரு மசோதாக்களையும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் இதுவரை ஆண்டுதோறும் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதி அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment