ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அத்தனகல்ல பிரதேச சபைக்கு கஹட்டோவிட்ட வட்டாரத்திலிருந்து மரச்சின்னத்தில் போட்டியிடும் அஸாம் பாஸ் அவர்களை ஆதரித்து, மக்கள் சந்திப்பொன்று வியாழக்கிழமை (01) ஓகொடபொல பிரதேசத்தில் நடைபெற்றது.
அமைச்சர் அவர்கள் மினுவாங்கொட பிரதேச சபையின் கல்லொழுவ, மீரிகம பிரதேச சபையின் கல் எளிய மற்றும் நாம்புலுவ – பஸ்யால, அத்தனகல்ல பிரதேச சபையின் திஹாரி ஆகிய பிரதேசங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பின்னர் கஹட்டோவிட்டவிற்கு வருகை தந்தார்.
ஏற்கனவே கஹட்டோவிட்ட பிரதேசத்தில் பிரச்சாரக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட போதும், அப்பிரதேசத்தில் ஏற்பட்ட ஜனாசா ஒன்றினால் கூட்டம் அவசரமாக ஓகடபொல பிரதேசத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட்ட பிரதேசத்திற்கு வருகை தந்த கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் ஜனாஸா வீட்டிற்குச் சென்று, பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் உரையாற்றிய வேட்பாளர் அஸாம் பாஸ் அவர்கள், ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை ஆதரித்து நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பாளர் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் இனவாதத்தைத் தூண்டி வாக்குக் கேட்பதாக கூறிய குற்றச்சாட்டினை வன்மையாகக் கண்டித்தார். அத்துடன், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவில்லாமல் ஐக்கிய தேசிய கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படலாம். அந்த நிலைமையில் நீங்கள் எம்மிடம் தான் உதவி கேட்க வேண்டி வரும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில், “எப்போதும் ஓகொடபொல கிராமம் என்பது முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகும். கஹட்டோவிட்டவில் கிடைக்கவிருக்கும் வாக்குகளுக்குக் குறையாதளவு வாக்குகள் ஓகொடபொலவிலிருந்தும் கிடைக்கும் என்று அஸாம் அவர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார். கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க சேவைகளைச் செய்திருந்தாலும், இம்முறை என்னுடைய ஒதுக்கீட்டில் சில பாதைகளைச் சீர்திருத்துவதற்காக கூடுதலான நிதிகளை ஒதுக்கவிருக்கிறேன்.
தற்போது அத்தனகல்ல ஓயா பாரிய நீர் வழங்கல் திட்டம் அமுலாகிக்கொண்டிருக்கிறது. 33 000 மில்லியன் ரூபா செலவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தாராளமாக நீர் வழங்கக்கூடியதாகவிருக்கும். இன்சா அல்லாஹ், என்னுடைய பதவிக்காலம் முடிவடைவதற்கிடையில் பூரணப்படுத்தப்படும். அதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறோம். உங்களுடைய ஊரிற்கு சில வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அஸாம் பாஸ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கட்சியின் மறைந்த தலைவர் இருந்த காலங்களில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்ட போதும், அதற்குப் பிறகு அது குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றாலும் விரைவில் அதனை தீர்த்து வைக்கிறேன். முஸ்லிம் காங்கிரஸ் வெறுமனே அபிவிருத்திக்கும் தொழில்வாய்ப்புக்கும் உருவான இயக்கமல்ல. இந்த சமூகத்தின் விடுதலைக்காக, அதனது உரிமைப் போராட்டத்திற்காக உருவான இயக்கம் என்ற அடிப்படையில் இந்த ஊர் மக்கள் தொடர்ந்தும் கட்சிக்குத் தந்த பேராதரவு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பீனர்களான அல் ஹாஜ் ஜவ்ஸி, முஹம்மத் நாஸிக், ஏனைய வேட்பாளர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட்ட ரிஹ்மி
No comments:
Post a Comment