தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் நேற்று கோரிக்கை விடுத்தனர். தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹை (வயது 66). பெண் தலைவரான இவருக்கு, சோய் சூன் சில் என்பவர் நெருங்கிய தோழி.
இருவரும் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் செயல்பட்டு முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டு, பெரும் தொகையை லஞ்சமாக பெற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பார்க் கியுன் ஹை, கடந்த ஆண்டு பதவி இழந்தார். அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது லஞ்சம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அரசு ரகசியங்களை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில், அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் நேற்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், “இந்த வழக்கில் பார்க் ஹியுன் ஹைக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க வேண்டும். அத்துடன் 110 மில்லியன் டாலர் (ரூ.715 கோடி) அபராதம் விதிக்க வேண்டும். நாட்டின் 18-வது அதிபராக பதவி வகித்த அவர், அப்போது நடந்து உள்ள ஊழல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.
அவரது தோழி சோய் சூன் சில்லுக்கு ஊழல் வழக்கில் 20 ஆண்டு சிறைத்தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டு விட்டது நினைவு கூரத்தக்கது.
No comments:
Post a Comment