எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடாத்துவதற்கு இடைக்கால தடை விதிக்ககப்பட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில், சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் மூவரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், குறித்த இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது.
அதற்கமைய குறித்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை இத்தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான அடுத்த விசாரணை பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான கே.டி. சித்ரசிறி, புவனேக அலுவிஹாரே மற்றும் பிரசன்னா ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, குறித்த இடைக்கால தடையுத்தரவை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும், காலி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் கிடைக்கச் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முறையான காரணமின்றி தங்களது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட மனுவின் பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment