மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழுள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் உதயம் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செப்பல் வீதி பொதுச்சேவை கழக வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இந்த விற்பனை நிலையத்தினை நேற்று திறந்து வைத்தார் .
இந்நிகழ்வில் தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி உதவியில் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான உணவு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் நிதியுதவி மற்றும் ஆதரவுடன் 2014ஆம் ஆண்டுவரை இந்தியாவின் சேவா நிறுவனத்தின் இணைப்புடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக செயற்பட்டது.
பின்னர் கிழக்கு மாகாண பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ் குமார், மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கே. கனகசுந்தரம், அம்கோர் நிறுவன நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் எஸ். யோகராஜன், இந்தியாவின் சேவா அமைப்பின் உபதலைவி றிகான றியாவாலா உட்பட நிதி இணைப்பாளர், உள்ளக இணைப்பாளர் மற்றும் பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment