பயன்படுத்தப்படாமல் உள்ள பயிர் நிலங்களை பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தி தேசிய உணவுற்பத்தியை அதிகரிக்க அனைவரும் திடசங்கற்பம்பூண வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தேசிய உணவுற்பத்தி வேலைத்திட்டத்தை வலுவுள்ளதாக மாற்றியமைக்க மாவட்டத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள சுமார் 12 ஹெக்டேயர் பயிர்நிலங்களில் பயிர்செய்கையை மேற்கொண்டு தேசிய உணவுற்பத்தியை அதிகரிக்க அனைவரும் செயற்படவேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
2018ம் ஆண்டுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்களின் வரிப்பணத்தில் வேதனம் பெறும் நாம் அனைவரும் மக்களுக்கான சேவையை பக்கசார்பின்றி நியாயமான முறையில் வழங்குதல் வேண்டும். மாவட்ட மட்டத்தில் விவசாய உற்பத்திகளை மேம்படுத்தி தேசிய உற்பத்திக்கு வலுச்சேர்க்க வேண்டும். அரச உத்தியோகத்தர்களும் தமது வாழ்விடங்களில் தேவையான பயிர்களை விதைக்க வேண்டும்.
தேசிய உணவுற்பத்தியில் தன்னிறைவை அடையும் நோக்காக கொண்டு தேசிய உணவுற்பத்தி வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிராமராஜ்ய முறையானது மக்களின் வறுமை நிலையை தணிக்க கொண்டு வரப்பட்ட செயல்திட்டமாக அமைவதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களும் 2018ம் ஆண்டுக்கான அரச சேவை சத்தியப்பரமானத்தை மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment