மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட லெமன்மோரா தோட்ட மக்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவருக்கும் வாக்களிக்காமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாம் புறக்கணிக்கப் போவதாகவும் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட லெமன்மோரா தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
தனியாருக்கு சொந்தமான லெமன்மோரா தோட்டத்தில் தங்களது அடிப்படை உரிமைகள், சலுகைகளை தோட்ட நிர்வாகம் வழங்க மறுப்பதாக தெரிவித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 16 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை.
தோட்ட மக்கள் தங்களது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியினை செலுத்த வேண்டும், முறையாக வேலை வழங்கப்பட வேண்டும், வீடமைப்பு திட்டத்திற்கு காணிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் லெமன்மோரா தோட்டத்தின் உரிமையாளர் அத்தோட்ட மக்களின் கோரிக்கையை புறக்கணித்து வருவதோடு, பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருதால் பொருளாதார ரீதியாக அவர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எமது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு மலையக அரசியல் தலைமைகள் எமது பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment