கிராமங்களுக்குள் ஊடுருவும் காட்டு யானைகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 3, 2018

கிராமங்களுக்குள் ஊடுருவும் காட்டு யானைகள்

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெடியமடு, உன்னிச்சை கிராமங்களுக்குள் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை காட்டு யானைகள் நடமாடித் திரிந்ததால் கிராம மக்கள் மரண பயத்தில் அஞ்சி ஒடுங்கிப் போனதாகத் அக்கிராம மக்கள் தெரிவித்தனர். கற்பானை, மதுரங்கண்டடிச்சேனை, நெடியமடு களிக்குளம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 210 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்த அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன.

காட்டு யானைகள் குட்டிகளோடு வருவதால் தாய் யானைகள் மிகவும் மூர்க்கத்துடன் காணப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரதேசத்தில் சில நாட்களாக காட்டு யானைகளின் ஊடுருவலால் ஏற்பட்டுள்ள உயிராபத்துக் குறித்து கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர்.

உன்னிச்சை தொடக்கம் கற்பானை வரையான நீண்ட வனப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வாழும் விவசாய குடிநிலப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக காட்டோரங்களில் மின்சார அதிர்ச்சித் தடுப்பு வேலிக்கான மின்சாரத்தை வழங்கும் செயலூக்கியை சமூக விரோத சக்திகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருடிச் சென்று விட்டனர்.

இதனால் யானைகள் மின்சார அதிர்ச்சி வேலிகளை ஏறி மிதித்துக் கொண்டு கிராமங்களுக்குள் நுழைய ஆரம்பித்து விட்டன. திருடப்பட்ட மின்சாரத்தை வழங்கும் செயலூக்கியை மீண்டும் அதிகாரிகள் பொருத்தவில்லை என்றும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது பெரும்போக நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய்கைக் காலம் என்பதாலும் மாரிமழை காலம் என்பதாலும் காட்டு யானைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவது தமது வாழ்வாதார மற்றும் உயிர்ப் போராட்டம் என்றும் கிராம மக்களும், விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment