2018 ஆம் ஆண்டு அரசாங்கம் உற்பத்தித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டை இதற்கான செயற்திட்டமாக அரசாங்கம் முன்னெடுத்திருப்பதனால் அரச அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த உற்பத்தி ஆண்டுத்திட்டத்தின் நோக்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதே ஆகும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சின் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார். 2018 புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களின் சந்திப்பிற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நிலைபேறான அபிவிருத்தி என்பது பல வருடங்களுக்கு முன்னர் நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வரலாற்றை நோக்குவோமாயின் இது தொடர்பான முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். 1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போது நிலவிய அபிவிருத்தியை தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா என இந்த துறையை சார்ந்தோர் ஆராய்ந்தனர்.
இது தொடர்பான நூல் ஒன்றும் அப்பொழுது எழுதப்பட்டது. நிலைபேறான அபிவிருத்தி குறித்த விடயம் ஐக்கிய நாடுகள் சபைக்கு எட்டிய பின்னர் நோர்வே நாட்டின் பிரதமர் தலைமையில் அதற்கென ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் பின்னரே நிலைபேறான அபிவிருத்தி என்ற விடயம் உலக அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டது.
இதில் மூன்று விடயங்கள் உண்டு. ஒன்று பொருளாதார அபிவிருத்தி, இரண்டாவது சமூக அபிவிருத்தி, மூன்றாவது சுற்றாடல் அபிவிருத்தி என்பதாகும் என்றும் செயலாளர் விளக்கமளித்தார். இந்த மூன்று விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் எதிர்கால சமூகத்தினருக்கு அபிவிருத்தியுடனான நாட்டை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
நாம் பயன்படுத்தும் இயற்கை வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்ய முடியாவிட்டால் அதன் இயற்கை தன்மையை பாதுகாத்து எதிர்கால சந்ததினருக்கு உரித்தாக்கவதற்கு எம்மால் முடியுமாக இருந்தால் அதுவே இதன் இலக்காக அமையும்.
எமது வாழ்க்கைமுறை இயற்கை வளங்களோடு சம்பந்தப்பட்டதாகவே அமைந்தது. இதனை வரலாற்றின் மூலம் உறுதிப்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறான விடயங்கைளை கொண்டே நிலைபேறான அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் திட்டத்தை வகுத்துள்ளது. அரசாங்க அதிகாரி என்ற ரீதியிலும் ஊழியர் என்ற ரீதியிலும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாட்டில் கடந்த வருடத்தில் ஒரு பகுதியில் வெள்ளமும் இன்னொரு பிரதேசத்தில் வறட்சியும் நிலவியது. இது தொடர்பாக ஏற்பட்ட பாதிப்புக்களை செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக நாட்டின் மொத்த வருமானத்தில் ஒரு சதவீதம் பூனரமைப்பு பணிக்கான செலவிடுவதற்காக ஒதுக்கிடவேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ரமணி குணவர்த்தன, அபிவிருத்தி மேலதிக செயலாளர் திருமதி திலக்க ஜயசுந்தர, அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment