பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் கொலையுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய முன்னாள் தற்காலிகப் பொறுப்பதிகாரியை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் (சி.ஐ.டி.) கைது செய்தனர்.
கே.எச்.பி.சுமித் ப்ரேமகுமார என்ற இந்த அதிகாரி, குறித்த கொலை தொடர்பாக விளக்கமளிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று (2) மாலை வந்திருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் இன்று முன்னிறுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தாம் பணியாற்றிய வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவரைக் கொலை செய்ய முயற்சித்த குற்றத்தின் பேரில் கடந்த ஒக்டோபர் மாதம் ஹுனுமுல்ல பகுதியைச் சேர்ந்த காமினி எட்வர்ட் (54) என்பவர் தமது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது, கைவிலங்கிடப்பட்ட நிலையில் காமினியை முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஒக்டோபர் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட காமினிக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டது. அதன்படி நீர்கொழும்பு சிறைச்சாலையில் மறித்து வைக்கப்பட்ட காமினி, மறுநாள் 4ஆம் திகதி மரணமானார். இது தொடர்பிலேயே சுமித் ப்ரேமகுமார தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment