கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பின்னணியில் போதைப்பொருள் பணக் கொடுக்கல் வாங்கல் இருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதி - ரயில் தண்டவாளம் உள்ள இடத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றது. இதில் நால்வர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால், ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவருமான குடு சுட்டாவையும் அவரது சகோதரன் சத்துரங்கவையும் பொலிஸார் தேடி வலை வீசியுள்ளனர்.
குடு சுட்டாவும், அவன் சகோதரனும் வதிவிடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பிலான பண கொடுக்கல் வாங்கல் ஒன்று தொடர்பிலான முறுகல் நிலை இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டின் போது கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட நால்வருமே காயமடைந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாகவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment