யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 10ஐ ஆரம்பிக்குமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் நேற்று (02) செவ்வாய்க்கிழமை கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது கோரிக்கைக்கான உறுதிமொழியை உரிய தரப்பினர் வழங்காததால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தற்போது தரம் 9 வரையான வகுப்புக்கள் இடம்பெறுகின்றன. பாடசாலையில் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“இவ்வருடத்தில் (2018) இருந்து தரம் 10 ஐ ஆரம்பித்து அடுத்த வருடம் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை நடத்துமாறு வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு கடந்த நவம்பர் 28 ஆம் திகதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஒரு மாதம் தாமதித்து டிசம்பர் 28 ஆம் திகதி, இவ்வருடம் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க முடியாது என வலயக் கல்விப் பணிப்பாளர் அறித்தார்” என பழைய மாணவர் சங்கச் செயலாளர் தெரிவித்தார்.
பொன்னாலை கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பாடாசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையம் ஆகிய பொது அமைப்புக்கள் இணைந்தே மேற்படிக் கோரிக்கையை முன்வைத்தனர்.
தமது கோரிக்கைக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பழைய மாணவர் சங்கம் குற்றஞ்சாட்டியது. இப்பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்றுவிட்டு வேறு பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் இடைவிலகுகின்றனர்.
இதனால் பொன்னாலைக் கிராமம் கல்வியில் தொடர்ச்சியாகப் பின்னடைந்து வருகின்றது என பெற்றோர் தெரிவித்தனர். தமது பாடசாலையில் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க அனுமதி வழங்கும் வரை தாங்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெற்றோர்களும் மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment