தொலைக்காட்சி நாடக தொடரை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுனைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். (கூலித் தொழிலாளி) சைத்ரா ஆகியோரின் மகள் பிரார்த்தனா (வயது 7) 2ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்துள்ளாள். வீட்டில் தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட கன்னட நாடகத்தை பார்ப்பதனை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
இந்த நாடகத்தில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்துள்ளன. அதைப் பார்த்த பிரார்த்தனா, தானும் கையில் ஒரு பேப்பரை எடுத்து தீ வைத்துக்கொண்டு நடனமாடியுள்ளாள்.
அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றியுள்ளது. வலி தாங்க முடியாமல் சிறுமி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்து அரச மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தாள். இதையடுத்து, சிறுமியின் தந்தை மஞ்சுநாத் அளித்த புகாரின் பேரில் ஹரிஹரா டவுன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரார்த்தனாவின் தந்தை மஞ்சுநாத் இது தொடர்பில் கூறுகையில், ‘‘குழந்தைகளை தொலைக்காட்சி நாடகம் பார்ப்பதை தடுக்க வேண்டும். நான் என் மகளை கண்காணிக்கத் தவறிவிட்டேன். என் மகள் உடலில் தீ வைத்து நடனமாடி உயிரிழந்திருக்கிறாள். இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment