கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி? நிபுணர் விளக்கம். - News View

About Us

About Us

Breaking

Sunday, December 3, 2017

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி? நிபுணர் விளக்கம்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா சமீபத்தில் சோதனை செய்தது அதன் அண்டை நாடுகளையும், அமெரிக்காவையும் கவலை அடையச் செய்துள்ளது. இந்த வகை ஏவுகணைகளின் செயல்பாடு மற்ற சாதாரண ஏவுகணைகளை விட முற்றிலும் வித்தியாசமானது. இது குறித்து வாஷிங்டனில் உள்ள ஆயுத கட்டுப்பாடு மற்றும் ஆயுத பரவல் தடை மையத்தின் மூத்த அறிவியல் ஆலோசகர் பிலிப் காயில் கூறியதாவது.

‘ஹவாசாங் - 15’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) வட கொரியா கடந்த 28ஆம் திகதி சோதனை செய்தது. இது ஏவுதளத்திலிருந்து 1000 கிலோ மீட்டர் தூரம், வானில் நேராக பயணம் செய்து வட கொரியாவுக்கு சற்று தள்ளி கடலில் விழுந்துள்ளது. இந்த ஏவுகணையில் சரியான வழிகாட்டி (நேவிகேஷன்) கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால், அது ஏவுதளத்திலிருந்து 13 ஆயிரம் கி.மீ தூரம் வரை சென்றிருந்திருக்கும். சோதனை முயற்சியாக ஏவப்பட்டுள்ளதால், அதில் வெடிபொருள் எதுவும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளது. 

ஐசிபிஎம் ஏவுகணைகள் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திலிருக்கும் நாடுகளை தாக்குவதற்காக உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலான ஐசிபிஎம் ஏவுகணைகள், செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட் தொழில்நுட்பத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. ஏவுதளத்திலிருந்து ஐசிபிஎம் ஏவுகணை ஏவப்பட்டவுடன், 2 முதல் 5 நிமிடங்களில் அது விண்வெளிக்கு சென்றுவிடும். இந்த ஏவுகணையிலும் 3 கட்ட ராக்கெட் இன்ஜின்கள் பொருத்தப்படும். இவை திரவ மற்றும் திட எரிபொருளில் செயல்படுபவையாக இருக்கும். குறிப்பிட்ட தூரம் சென்றதும் ஒவ்வொன்றாக பிரிந்து விடும். 

விண்வெளியில் ஐசிபிஎம் ஏவுகணை நுழைந்ததும், காற்றின் மூலம் ஏற்படும் தடை இருக்காது. இதனால் அதன் வேகம் மணிக்கு 24 ஆயிரம் கி.மீ முதல் 27,360 கி.மீ வேகம் வரை அதிகரிக்கும். மூன்றாவது கட்டத்தில் ஏவுகணை எந்த இலக்கை தாக்க வேண்டுமோ, அந்த இடம் நெருங்கியதும் மீண்டும் பூமிக்குள் நுழையும். அப்போது ஏற்படும் ஊராய்வில் மிக அதிகளவிலான வெப்பத்தை தாங்கும் வகையில் அந்த ஏவுகணையில் வெப்ப பாதுகாப்பு கவசம் இருக்க வேண்டும். இல்லையென்றால் வானிலேயே அந்த ஏவுகணை எரிந்துவிடும். 3வது கட்டத்தை வெற்றிகரமாக கடந்த பின்புதான் ஏவுகணையில் உள்ள வெடிபொருளோ அல்லது அணு ஆயுதமோ இலக்கை தாக்கி அழிக்கும். 

வடகொரியா கடந்த ஜூலை 4ஆம் திகதி சோதித்த ஏவுகணை 37 நிமிடங்கள் பறந்தது. ஜூலை 28ஆம் தேதி சோதித்த ஏவுகணை 47 நிமிடங்கள் பறந்தது. தற்போது சோதித்த ‘ஹவாசாங் - 15’ ஏவுகணை 54 நிமிடங்கள் பறந்துள்ளது. சர்வதேச விண்வெளி மையம் (ஐஎஸ்எஸ்) இருக்கும் தூரத்தைவிட 10 மடங்கு அதிக உயரம் பறந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன. 

ஆனால் எந்த ஏவுகணைகளும் மற்ற நாடுகளை தாக்குவதற்காக இதுவரை பயன்படுத்தப்படவில்லை. சோதித்து மட்டுமே பார்த்துள்ளன. அதேபோல்தான் வட கொரியாவும் சோதனை செய்துள்ளது. அணு ஆயுதத்துடன் ஐசிபிஎம் ஏவுகணைகளை போரில் பயன்படுத்தினால் மனித குலத்துக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். என அவர் கூறினார்.

No comments:

Post a Comment