2020ஆம் ஆண்டு யார் இலங்கையின் தலைவராக வருவார் என்ற வகையில் எவ்விதமான ஆய்வையும் கருத்துக்கணிப்பையும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு மேற்கொள்ளவில்லை என்றும் அதுதொடர்பில் பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையென்றும் தாம் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம் என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஊடகத்துறைப் பிரிவு தெரிவித்திருக்கின்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு நடாத்திய கருத்துக்கணிப்பொன்றில் 2020ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவு செய்யப்படுவார் என்று நேற்று வெளியான வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் ஊடகப்பிரிவின் இணைப்பாளர் பேராசிரியர் சமந்த ஹேரத் கையொப்பமிட்டு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளவாறு எவ்விதமான கருத்துக்கணிப்பையும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு செய்யவில்லை. இவ்வாறு கொழும்பு பல்கலைக்கழகம் கருத்துக்கணிப்பை நடாத்தியதாக, செய்தியை வெளியிடுவதன் மூலம் வாசகர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
எந்தவொரு நபரும் ஆய்வொன்றை நடத்துவதும் அதனை பிரசுரிப்பதற்கும் உரிமையைக் கொண்டிருக்கிறார். ஆனால் அவ்வாறானதொரு கருத்துக்கணிப்பை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு செய்திருந்தால் அதனை கொழும்பு பல்கலைக்கழகம் செய்ததாக கூறுவது வேறுபட்ட அர்த்தத்தைக் காட்டும்.
இந்த செய்தி வெளியானதன் பின்னர் இவ்வாறானதொரு கருத்துக்கணிப்பை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு முன்னெடுத்ததா என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். ஆனால் அது தொடர்பில் எம்மை யாரும் தெளிவுபடுத்தவில்லை. அதனால்தான் இதுதொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த அறிக்கையை நான் வெளியிடுகின்றேன்.
அந்தவகையில் 2020ஆம் ஆண்டு தலைவர் யார் என்ற வகையில் கொழும்பு பல்கலைக்கழகம் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பொய்யானது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த விடயத்துடன் கொழும்பு பல்கலைக்கழகமோ அல்லது ஊடகப்பிரிவோ எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை.
வீரகேசரி
No comments:
Post a Comment