இலவசக் கல்வியின் இலட்சியம் யதார்த்தமாகும் இலக்கு எங்கே? - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

இலவசக் கல்வியின் இலட்சியம் யதார்த்தமாகும் இலக்கு எங்கே?

சுஐப் எம்.காசிம்

கொரோனா காலத்துப் பழக்கவழக்கங்களில் இப்போது, இணையவழிக் கல்வி (online) தவிர்க்க முடியாததாகியுள்ளது. எனினும், இதனால் எதிர்கொள்ள நேர்கின்ற சில சங்கடங்கள் மனச்சாட்சிகளைக் கீறி விடாமலுமில்லை. எல்லோருக்கும் இலவசக் கல்வியென்ற சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவின் இலட்சியத்தையும் இது காயப்படுத்தாமலுமில்லை. மேலும், மெல்லக் கற்கும் பிள்ளைகளுக்கு இது விளங்குவதும் இல்லை. இப்படி, பொதுவாக "இல்லை" என்கின்ற சொல்லுக்குப் பொருத்தமானதாகவே இந்த இணையவழிக் கல்விமுறை உள்ளது. பணமில்லாத பிள்ளைகளுக்கு இந்தக் கற்பித்தல் முறை சாத்தியமே இல்லை. இதுதான் இன்று எழுந்து, இனிமேல் உயரத் தாவவுள்ள தர்க்கிப்புக்களாகப் போகின்றன. இந்தக் கல்விக்காக, பெற்றோருக்கு ஏற்படவுள்ள செலவுகள்தான் இன்றுள்ள பிரதான சவால்.

நாலு பிள்ளைகள் இருந்தால், குறைந்தது நாலு கைபேசிக்கும் நாற்பதாயிரம் ரூபா. நாளாந்த தொழிலாளியின் நிலைமை, நமக்கு நிழலாட இதுவே போதும். வருடாந்த வகுப்புக்கட்டணம் ஐநூறு ரூபா இல்லாமல், எத்தனை பிள்ளைகள் வெட்கத்தில் பாடசாலைக்கு வரமறுக்கின்ற சூழலில், இந்தச் சுமையை எந்தப் பெற்றோர்தான் சுமப்பது? எப்படியாவது வாங்கிக் கொடுத்தாலும், சமிக்ஞை (Coverage) இல்லாத கிராமத்துப் பிள்ளைகள், காட்டுமரங்களிலும் கட்டடத் தூண்களிலும் குந்திக்கொண்டு கற்கவும் நேரிடுகிறது. இந்த இணையவழி கற்பித்தல் முறையில், சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களும் இல்லாதிருக்கின்றன. இதனால்தான், நீண்ட நாட்களுக்கு இது நிலைக்கப்போவதில்லை என்ற நிலைமைகளும் தோன்றி வருகின்றன.

இந்த இணையவழிக் கல்வி (Online) தொடர்பில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனநிலைகள் ஒன்றுக்கொன்று கோணலாக உள்ளதும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் ஆதங்கங்கள் ஆறுதலாக இல்லாதமையும்தான் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. படிக்கின்ற போர்வையில் சில மாணவர்கள் வயதுக்கு மீறிய காட்சிகளைப் பார்க்கின்றமை, கைபேசியைக் கையில் வைத்தவாறே தூங்கிவிடுதல், கள்ளத்தனங்காட்டுதல், மாணவர்களின் பிரச்சினையாகி வருகின்றன. ஆசிரியர்களின் பிரச்சினைகளில் பலவை; அரசியலாக்கப்படுதல், படிப்பித்தலில் ஆற்றாமை குறைந்த ஆசிரியர்களின் கற்பித்தலை கிரகிக்க முடியாத நிலை, உச்சரிப்பு ஒலிகளில் தெளிவில்லாதமை எல்லாம் ஆசிரியர் தரப்புக் குறைபாடுகளாகவும் பதியப்பட்டுள்ளன.

இந்த யதார்த்தங்களின் விளைவுகளுக்குள் அரசாங்கத்தின் சில செயற்பாடுகளையும் செருகிவிடும் முயற்சிகள், முரண்பாடுகளாகி ஆர்ப்பாட்டம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தில் வந்து நிற்கிறது விடயம். இலவசக் கல்வியை வியாபாரமாக்கும் வேலைகளுக்கே இடமில்லை, ஜோன் கொத்தலாவல அகடமியை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது, சைற்றம் (Saitam) தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவக் கல்லூரியின் பட்டங்களை எம்.பி.பி.எஸ் (MBBS) பட்டத்துடன் இணைக்கும் வேலைகளை நிறுத்துமாறுதான் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன, இன்னும் நடத்தவும்படுகின்றன.

திறமையால் முன்னேறும் மாணவர்களை மலினப்படுத்தும் கேவலமாகத்தான், இந்தச் செயற்பாடுகளை இந்தச் சங்கம் நோக்குகிறது. கல்வியை காசுக்கு வழங்கும் இந்தத் திட்டம், கன்னங்கராவின் இலவச கல்விக் கொள்கைக்கு இழுக்கென்கின்றனர் இவர்கள். அரசாங்கமோ, பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியுள்ள புள்ளிகளைப் பெற்றும், இடப்பற்றாக் குறையால் தட்டிக்கழிக்கப்படும் மாணவர்கள்தான் இந்த பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்படுவதாக நியாயம் கூறுகிறது. சுகாதாரத் துறையின் பௌதிக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படுகையில், அதற்கேற்ற எண்ணிக்கையில் வைத்தியர்களும் தேவைப்படவே செய்வர்.

இதையெல்லாவற்றையும் விட, சுமார் ஒன்றரை வருடங்களாக கல்வியின்றி, பாடசாலையின்றியிருந்த நமது பிள்ளைகள், ஏதோவொரு முறையில் (Online) படிக்க ஆரம்பித்துள்ள இந்தச் சூழலில் ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் என்பவை எந்த நியாயத்திற்கு உட்பட்டது? என்பதை, இதற்கு உடன்பாடானோர் உள்ளத்தைத் தொட்டுச் சொல்ல வேண்டும். இதுதான் நமது பிள்ளைகளின் கேள்வி.

No comments:

Post a Comment

Post Bottom Ad