ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் உயிரிழந்த சிறுமியின் மரணம் குறித்த விசாரணை என்னவானது? குற்றவாளிகளை கண்டறிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? - மனோ, இராதா, அநுரகுமார கேள்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 21, 2021

ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் உயிரிழந்த சிறுமியின் மரணம் குறித்த விசாரணை என்னவானது? குற்றவாளிகளை கண்டறிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? - மனோ, இராதா, அநுரகுமார கேள்வி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் உயிரிழந்த சிறுமியின் மரணம் குறித்த விசாரணை என்னவானது? குற்றவாளிகளை கண்டறிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.வி.பி தலைவர் அநுகுமார திசாநாயக ஆகியோர் சபையில் கேள்வி எழுப்பினர்.

சிறுமியின் மரணம் குறித்து இரண்டு பொலிஸ் குழுவினர் விசாரணைகளை நடத்துவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் மனோ கணேசன், முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

"நுவரெலியா மாவட்டம் டயகமவில் அமைந்துள்ள அக்கரப்பத்தனை பிளாண்டேஷனில் 3 ஆம் பிரிவை சேர்ந்த ரஞ்சனி ராஜமாணிக்கம் ஜெயராஜ் ஜூட் குமார் தம்பதியின் மகள் இஷாலினி இம்மாதம் 3 ஆம் திகதி பாராளுமனற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் நிகழ்ந்த சந்தேகத்திற்கிடமான தீப்பற்றிய சம்பவத்திலே படுகாயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் இறந்து போனார். இது முழு மலைநாட்டிலும், முழு நாட்டிலும் சோக அலைகளையும் கோப அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (நேற்று முன்தினம்) இந்த சபையிலே பேசிய அரச உறுப்பினர்கள் இது தொடர்பான பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி மீது திருப்புவதற்கு முயற்சி செய்தார்கள். அது பிழையானது. நாட்டை ஆள்பவர்கள் நீங்கள். நாங்கள் அல்ல. ஆகவே அரசின் கீழ்தான் இந்த பொலிஸ் துறை இருக்கின்றது. ஆகவேதான் பொலிஸ் துறை அமைச்சரை நான் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து தேடிக் கொண்டிருக்கின்றேன். பலமுறை தொலைபேசி அழைப்புக்களை எடுத்தேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

எந்தவித அழுத்தங்களும் இன்றி விசாரணை மேற்கொள்ளுங்கள். புதிய பொலிஸ் குழுவிடம் விசாரணையை கையளியுங்கள். இந்த விசாரணையிலிருந்து பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பலசூரியவை அகற்றுங்கள். அவரின் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி தெரியவும் இல்லை.

அதேவேளை ரிஷாத் பதியுதீன் மீது அரசியல் காரணங்களுக்காக நெருக்கடிகளை ஏற்படுத்தி அவரை இந்த அரசு செயலிழக்க வைத்துள்ளது. அந்த பிரச்சினைகளின் போதெல்லாம் நாங்கள் அவருக்காக குரல் கொடுத்து பேசியிருக்கின்றோம்.

அதேவேளை இந்த சம்பவம் அவரின் இல்லத்தில் நடந்த காரணத்தினால் நாங்கள் எமது மக்கள் சார்பாக முன்னிலை நிற்க வேண்டும் . அதற்காக பேச வேண்டும். குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும் என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற ரீதியில் இங்கு தெளிவாக கூறுகின்றேன் என்றார்.

ராதாகிருஷ்ணன் எம்.பி உரையாற்றுகையில், ரிஷாத் பதியுதீன் அவர்களின் வீட்டில் உயிரிழந்த இஷாலினியின் மரணம் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான அறிக்கை ஒன்றை தயாரித்து எந்தவித பாரபட்சம் இன்றி தப்பு செய்தவர்களுக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலையக மக்கள் இவ்வாறு பல்வேறு சந்தர்பங்களில் முகங்கொடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள வர்த்தகர்கள் இவ்வாறான மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை அமைச்சர் தடுக்க வேண்டும்.

18 வயதிற்கு குறைந்த சகலரும் சிறுவர்களே, இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிஷாத் பதியதீன் மீது தனிப்பட்ட எந்த கோபதாபங்களும் எம்மிடத்தில் இல்லை, ஆனால் குற்றம் செய்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.

ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஜே.வி.பியின் தலைவர் அநுகுமார திசாநாயக, ரிஷாத் பதியுதீன் வீட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த சிறுமி பாலியல் ரீதியிலும் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்ததாக கூறப்படுகின்றது.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களில் உயிரிழந்துள்ளார். இது குறித்த விசாரணை எந்த மட்டத்தில் உள்ளது, இந்த விடயத்தில் என்ன நடந்துள்ளது என்பதை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என கேள்வி எழுப்பியார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, 16 வயது சிறுமி ரிஷாத் பதியுதீனின் வீட்டிலேயே பணி புரிந்துள்ளார். உங்களின் கூட்டணியின் கட்சி தலைவர் ஒருவரின் வீட்டில் என்றும் கூறலாம். அவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அதேபோல் அவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவே மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இப்போதும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த சிறுமியின் இல்லத்திற்கும் சென்று காரணிகளை அறிந்து விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர், இப்போதும் இரண்டு பொலிஸ் குழுக்கள் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment