இரட்டை குழந்தைகளும் அவர்களின் பாட்டனாரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு : கொஸ்கொடையை உலுக்கிய பரிதாப மரணங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

இரட்டை குழந்தைகளும் அவர்களின் பாட்டனாரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு : கொஸ்கொடையை உலுக்கிய பரிதாப மரணங்கள்

கொஸ்கொடை துவேமோதர ஆற்றின் நாபே பிரதேச படகு இறங்கு துறையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வயது நிரம்பிய இரட்டையர்களும் மற்றும் அவர்களது தாத்தாவும் கடந்த 10ஆம் திகதி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்தவர்கள் காலி தடல்ல பிரதேசத்தில் வசித்த காலி சென் அலோசியஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் ஆறு வயதான சகிக சஸ்விது கந்தஉட மற்றும் சமிக சஸ்விது கந்தஉட என்னும் இரட்டை சகோதரர்களும் கொஸ்கொட நாப்பே பிரதேசத்தில் வசித்த அவர்களது தாத்தாவான 62 வயதான அகம்பொடி இந்திக்க ராஜகுமார ஆகியோர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Covid-19 தொற்று காரணமாக கிடைத்த பாடசாலை விடுமுறையில் காலி தடல்ல பிரதேசத்தில் வசிக்கும் இந்த இரட்டையர்கள் தனது தாயாருடன் கொஸ்கொட நாப்பே பிரதேசத்திலுள்ள தாத்தாவின் வீட்டிற்கு வந்துள்ளார்கள். வந்த இடத்திலேயே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்த சிறுவர்கள் இருவரும் ஆற்றில் குளிக்க விரும்பியதால் தாயின் தந்தையுடன் வீட்டின் பின்புறம் உள்ள ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

இறந்த இரண்டு சிறுவர்களும் இவ்வருடம் (2021) தரம் ஒன்றிற்கு காலி அலோசியஸ் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். 

அவர்களின் தாத்தா படகு செலுத்துவதிலும் நீந்துவதிலும் திறமையானவர் எனவும் தாத்தா துவேமோதர ஆற்றுக்கு பேரர்களுடன் படகில் சென்று படகை பிடித்துக் கொண்டு நீராடும்போது சிறுவர்கள் படகை கைவிட்டு நீரில் மூழ்கியதால் அவர்களை மீட்க சென்ற தாத்தாவும் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் கடந்த 10ஆம் திகதி முற்பகல் பன்னிரண்டரை மணி அளவில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்கள் எனவும் பிரதேசவாசிகள் நீரில் இறங்கி அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டாலும் அவர்கள் மூவரும் கிடைக்காததால் கடற்படையின் நீர்மூழ்கி அணியினரை அழைக்க வேண்டி நேரிட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையின் நீர்மூழ்கி அணியினர் மூவரின் உடல்களையும் 10ஆம் திகதி மாலை மீட்டுள்ளார்கள். நீரில் மூழ்கி இறந்த மூவரினதும் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பலப்பிட்டிய பிரேத அறையில் வைக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனை நடைபெற்று சடலம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கொட பொலிஸ் நிலைய அதிபர் தலைமை பொலிஸ் விசாரணையாளர் மங்கல த சொய்சா, குற்றப்பிரிவு அதிபர் போலிஸ் விசாரணையாளர் அசேல ஹேமந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அனுராத பிரியதர்ஷன

No comments:

Post a Comment