அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் - மஹிந்தானந்த - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 20, 2021

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் - மஹிந்தானந்த

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்வரும் போகத்திலிருந்து நெல் மற்றும் அரிசியின் விலையை அரசாங்கமே தீர்மானிக்கும். அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்பதுடன் சட்ட நடவடிக்கையும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து, எதிர்வரும் இரண்டு வாரங்களில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் அரசாங்கம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடவுள்ளது. வர்த்தக அமைச்சும் விவசாய அமைச்சும் கூட்டாக இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறோம். எதிர்வரும் போகத்தில் 50, 52 ரூபாய்க்கே நெல்லை கொள்வனவு செய்யவுள்ளோம். அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளனர்.

உடன்படிக்கையின் பிரகாரம் அரிசியை அதிக விலைக்கு யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு இதுவரை இருந்த 2,500 ரூபாவாக இருந்த தண்டப்பணத்தை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். ஆகவே, அதிக விலைக்கு நெல்லை எவரும் வாங்கினாலும் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது.

அத்துடன் அரிசி விலை குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையுடனும் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளோம். எதிர்வரும் போகத்தில் பெறப்படும் அரிசியை யாரும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்ய முடியாது. 

நாடு அரிசி ஒரு கிலோ 120, சம்பா ஒரு கிலோ 150, கீறி சம்பாவை 225 ரூபாவுக்கும் விற்பனை செய்கின்றனர். இவை அனைத்துக்கும் காரணம் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு வெறும் 2,500 ரூபா தண்டப்பணத்தை அறவிடுவதாகும். குறித்த தண்டப்பணத்தை ஆலை உரிமையாளர்கள் இலகுவாக செலுத்துகின்றனர்.

ஆகவே, இதன் பின்னர் அரிசி மற்றும் நெல் விலையை அரசாங்கம் தான் தீர்மானிக்கும். தனி நபர்களால் இதனை தீர்மானிக்க முடியாதென தெளிவாக கூறிவிட்டோம். அதேபோன்று விவசாயிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்லையும் கொள்வனவு செய்வோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad