சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை கூட்டணியின் முரண்பாடு என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள் : சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை கூட்டணியின் முரண்பாடு என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள் : சுசில் பிரேமஜயந்த

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் கூட்டணி அடிப்படையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை கூட்டணியின் முரண்பாடு என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். கூட்டணியை பலப்படுத்த உரிய நடவடிக்கையினை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முன்னெடுப்பார்கள் என தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், பொதுஜன பெரமுனவிற்கும் கூட்டணி அடிப்படையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. இரு தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் காணப்படும் தனிப்பட்ட முரண்பாட்டை கூட்டணியின் முரண்பாடு என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானதாகும். கூட்டணியின் ஊடாக ஒன்றினைந்ததனால்தான் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேசிய தேர்தல்களில் வெற்றி பெற முடிந்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை புறக்கணிக்கும் வகையில் பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைப்பது வெறுக்கத்தக்கது. இராஜாங்க அமைச்சர்கள் ஒரு சிலரின் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் தேவையில்லாத பிரச்சினைகளை தற்போது தோற்றுவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரசியல் ரீதியிலான விடயங்களில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போயுள்ளது. இதனாலேயே பல பிரச்சினைகள் இரு தரப்பிலும் தோற்றம் பெற்றது அதனை அவர்கள் கூட்டணியின் பிரச்சினை என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இரு தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட்டால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தைக்கு பின்னர் கூட்டணி பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment